ஒரு வெள்ளாடு தன் தாயுடன் ஆனி மாதத்தில் வெகு உல்லாசமாய்த் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது.
அது தன் தாயைப் பார்த்து, “ராஜலீலை என்னும் விழாக் காலத்தில் அதிசயமாய்ப் பூக்கும் ராஜ மலரை அதிகமாகத் தின்று விழா கொண்டாடப் போகிறேன்.” என்றது.
அதற்கு அந்தத் தாய் ஆடு, “குழந்தாய்! நீ நினக்கிறப்டி அது அவ்வளவு சுலபமானதல்ல. ராஜ மலரினால் விழா கொண்டாடுவதற்கு முன்பு நீ அதிகமான கண்டங்களிலிருந்து தப்பிப் பிழைக்க வேண்டியிருக்கிறது. வருகிற புரட்டாசி, ஐப்பசி மாதங்கள் உனக்குப் பொல்லாத காலங்கள். துர்கா பூஜைக்கு உன்னை யாராவது பலி கொடுத்து விடுவார்கள். அடுத்து காளி பூஜை வருகிறது. அதையும் தப்பினால் ஜகதாத்ரி பூஜை வரும். அப்போது உயிர் தப்பியிருக்கும் எல்லா ஆடுகளையும் பலியிட்டு விடுவார்கள். இந்த கண்டங்களுக்கெல்லாம் நீ தப்பிப் பிழைப்பாயானால், கார்த்திகை மாதம் ராஜ மலர் விழாவை நீ கொண்டாடலாம்.” என்றது.
தாய் ஆடு சொன்னது போல் நமது வாழ்நாளில் நேரிடக் கூடிய கண்டங்களை உணர வேண்டும். இளமையில் மனத்தில் தோன்றும் எல்லாவிதமான ஆசாபாசங்களும் பூர்த்தியாகக் கூடியவையென நினைத்திருக்கக் கூடாது.