கிருஷ்ணன் சிறுவனாக இருந்த போது நண்பர்கள் சிலருடன் கோபியர் வீடுகளுக்குச் சென்று, அவர்களுக்குத் தெரியாமல் வீட்டு உரியில் வைக்கப்பட்டிருக்கும் வெண்ணெய், தயிர் போன்ற பொருட்களை எடுத்துச் சாப்பிட்டு விடுவான். உடன் வந்த நண்பர்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்து விடுவான்.
ஒரு வீட்டில் கிருஷ்ணனுடைய திருட்டைக் கண்டுபிடிக்க உரியின் மீது ஒரு மணியைக் கட்டி வைத்திருந்தார்கள்.
மணியைப் பார்த்த கிருஷ்ணன், அதற்கான காரணத்தைத் தெரிந்து கொண்டான்.
கிருஷ்ணன் மணியிடம், “ஓசை எழுப்பி என்னைக் காட்டிக் கொடுக்க வேண்டாம்” கேட்டுக் கொண்டான்.
மணியும் சரி என்றது.
கிருஷ்ணன் தன் நண்பர்கள் ஒருவர் மீது ஒருவராக நிற்கச் செய்து உச்சியில் ஏறினான்.
உரிப்பானையிலிருந்த வெண்ணெய்யை எடுத்துக் கீழிருந்த நண்பர்களுக்குக் கொடுத்து, அவர்களைச் சாப்பிடச் செய்தான். கடைசியாக தனக்கும் எடுத்துச் சாப்பிட்டான்.
சிறிது நேரத்தில் மணி ஓசை எழுப்பத் தொடங்கியது. இதைக் கேட்ட கிருஷ்ணன் திடுக்கிட்டான்.
“மணியே உன்னை ஓசை எழுப்பக் கூடாது என்று கேட்டுக் கொண்டேன். நீயும் சரி என்று சொல்லி ஒத்துக் கொண்டாய். பின்னர் ஏன் ஓசை எழுப்புகிறாய்?”
“என்னால் ஓசை எழுப்பாமல் இருக்க முடியவில்லை கிருஷ்ணா! என்னை மன்னித்து விடு. என் தெய்வத்திற்கு நைவேத்தியம் படைக்கும் வரை நான் காத்திருந்தேன். கடவுள் வழிபாட்டில் நைவேத்தியத்திற்குப் பின்பு தீபாராதனைதான். தீபாராதனையின் போது மணியடிப்பதும் அதற்கேற்ற ஓசை எழுப்புவதும் என் இயல்பு. எனவே தற்போது என்னால் ஓசை எழுப்பாமல் இருக்க முடியவில்லை” என்றது மணி.