குருச்சேத்திரப் போர் முடிந்தது.
பீமனின் கதையால் தொடையில் தாக்கப்பட்ட துரியோதனன் சாகும் நிலையில் இருந்தான்.
அங்கு வந்த அசுவத்தாமன் துரியோதனனுக்கு மகிழ்ச்சி அளிக்க நினைத்தான்.
பாண்டவரின் பாசறைக்குள் நள்ளிரவில் நுழைந்து உப பாண்டவர்கள் ஐவரையும் கொன்றான். அவர்கள் தலையை எடுத்து வந்து துரியோதனனிடம் காட்டினான்.
ஆனால் துரியோதனனோ மகிழ்ச்சி அடைவதற்குப் பதில், "என் எதிரிகள் பாண்டவர்களே, அவர்கள் மக்களாகிய உப பாண்டவர்கள் அல்ல. எதற்காக இந்தக் குழந்தைகளைக் கொன்றாய்?" என்று வருத்தத்துடன் கேட்டு உயிரை விட்டான்.
தன் மகன்கள் ஐவரும் வஞ்சகமாகக் கொல்லப்பட்டதை அறிந்து பாஞ்சாலி அழுது புலம்பித் துடித்தாள்.
பாஞ்சாலியைப் பார்த்து அர்ச்சுனன், "அன்பே, நம் மக்களைக் கொன்ற அந்த அசுவத்தாமனின் தலையைக் கொண்டு வருகிறேன். இது என் காண்டீபத்தின் மீது ஆணை. அவன் தலையையே பத்திரமாக வைத்து நம் குழந்தைகளை நீராட்டு." என்று வஞ்சினம் கூறிப் புறப்பட்டான்.
அஞ்சி ஓடிய அசுவத்தாமனைத் துரத்திச் சென்றான். இருவருக்கும் கடும் போர் நடந்தது. அசுவத்தாமன் எய்த அம்புகள் அனைத்தும் பயனற்றுப் போயின.
தோற்ற அசுவத்தாமனை அர்ச்சுனன் கொல்லவில்லை. கயிற்றால் பிணைத்துத் தன் பாசறை நோக்கி இழுத்து வந்தான்.
இதைப் பார்த்த கண்ணன் "அர்ச்சுனா? இந்தக் கொடியவனை எங்கே இழுத்துச் செல்கிறாய்? காண்டீபத்தின் மீது ஆணையிட்டு இவனைக் கொல்வதாகச் சபதம் செய்தாயே. அது என்ன ஆயிற்று? தூங்கிக் கொண்டிருந்த சிறுவர்களைச் சிறிதும் இரக்கமின்றிக் கொன்றானே. இவனைக் கொல்வதே இப்போது செய்ய வேண்டியது " என்றார்.
"கண்ணா , நான் என்ன செய்வேன்? என் மக்களைக் கொன்ற இவன் என் ஆசிரியரின் மகனாக அல்லவா இருக்கிறான்? இவனைக் கொன்று என் ஆசிரியரின் குடும்பத்திற்கு எப்படி துன்பத்தை ஏற்படுத்துவேன்?" என்றான் அர்சசுனன்.
அசுவத்தாமனை இழுத்து வந்து பாஞ்சாலி முன் நிறுத்தினான் அர்ச்சுனன்.
தலை கவிழ்ந்து நின்ற அசுவத்தாமனைப் பார்த்து பாஞ்சாலியின் மனம் இளகியது.
"என் மக்களைக் கொன்ற பெரும்பாவி இவர். ஆனால் இவரைக் கொன்று நாம் குரு துரோகத்திற்கு ஆளாக வேண்டாம். நான் மக்களை இழந்து தவிப்பது போல் நம் குருவின் மனைவியும் தவிக்க வேண்டாம். இவர் கட்டுகளை அவிழ்த்து விடுங்கள்" என்றாள்.
விடுதலை பெற்ற அசுவத்தாமன் தலை கவிழந்தபடி அங்கிருந்து சென்றான்.