ஒரு ஊர்ல ஒரு ராசா முட்டாள்தனமான செயல்பாடுகளை உடையவனாக இருந்தான்.
அவனுடைய நாட்டில் அனைவரும் பகலில் தூங்கி விட வேண்டும். இரவில் விழித்து வேலை பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தான். இதை மீறுபவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தான்.
பக்கத்து நாட்டைச் சேர்ந்த புத்திசாலித்தனமான மூன்று நண்பர்கள் தங்கள் திறமையைக் காண்பித்து மன்னரிடம் பரிசு பெற்றுச் செல்லலாம் என வந்தனர்.
அவர்களுக்கு அந்நாட்டிலிருந்த மன்னரின் விதிமுறை வித்தியாசமாக இருந்தன.
மன்னரின் மூடத்தனமான செயல்பாடு அவர்களுக்குப் புதியதாக இருந்ததால், மன்னரை அந்த மூடத்தனத்தைக் கொண்டே அழித்திட திட்டம் தீட்டினார்கள்.
மறுநாள், காலை விடிந்தவுடன் அவர்கள் எழுந்து சமையல் செய்யத் தொடங்கினர்.
நகர்வலம் வந்த அந்நாட்டு வீரர்கள் அவர்களிடம், “இந்த நாட்டுச் சட்டம் தெரியாமல் இப்படி சமையல் செய்ததால், தங்களை விட்டு விடுகிறோம்.நீங்கள் மூவரும் இப்போது தூங்கிவிட்டு, இரவு வந்த பின்பு சமையல் செய்யலாம்” என்றனர்.
அதற்கு மூவரும், “முடியாது. நாங்கள் பகலில் சமைத்துச் சாப்பிடுவோம். இரவில்தான் தூங்குவோம்” என்றனர்.
அநநாட்டுப் படைவீரர்கள் மூவரையும் அழைத்துக் கொண்டு, மன்னன் முன்பு நிறுத்தினர்.
மன்னர், “எதற்காக இப்படி பகலில் தூங்காமல் சமையல் செய்தீர்கள்? இந்நாட்டுச் சட்டம் தெரியாது என்று சொன்னால் உங்களை விடுவித்து விடுகிறேன். நாளை முதல் இந்நாட்டுச் சட்டப்படி நடந்து கொள்ளுங்கள்” என்றார்.
உடனே மூவரும், “இல்லை, மன்னா, தங்கள் நாட்டுச் சட்டம் தெரிந்துதான் இப்படி செய்தோம்” என்றனர்.
“மன்னரின் உத்தரவு தெரிந்தும் அதை மீறிச் செயல்பட்ட இவர்கள் மூவரையும் கழுவிலேற்றிக் கொன்று விடுங்கள்” என்று ஆணையிட்டான்.
அவர்கள் மூவரும் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியடைந்தனர்.
இதைப் பார்த்த, அரசவையிலிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
மூன்று பேர்களும் , “மன்னா! என்னை முதலில் கழுவிலேற்றிக் கொல்லுங்கள்” என்று தாங்களாகவே முன் வந்தனர்.
மன்னருக்கு மீண்டும் அதிர்ச்சி. மரணத்திற்கு முதலில் நான் என்று மூவரும் போட்டியிடுகிறார்களே என்று ஆச்சர்யப்பட்டான்.
மன்னன் அவர்களிடம், “முதலில் மரணமடைய வேண்டுமென்று நீங்கள் மூவருமே விரும்புவது ஏன்?” என்று கேட்டான்.
மூவரும், “மன்னா, இன்று முதலில் இறப்பவர்கள் நேரடியாகச் சுவர்க்கம் செல்வார்கள். எனவே, நான்தான் முதலில் மரணமடைவேன்” என்றனர்.
இதைக் கேட்ட மன்னன், மந்திரிகளிடம் ஆலோசித்தான்.
மந்திரிகள், “மன்னா, இவர்கள் மூவரும் மரணத்தை முதலில் ஏற்று சுவர்க்கம் செல்ல வேண்டுமென்று விரும்புகிறார்கள். வேற்று நாட்டிலிருந்து நம் நாட்டிற்கு வந்து இவர்கள் சுவர்க்கம் செல்வதா? நம் நாட்டிலிருப்பவர்களுக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும்” என்று அறிவுரை வழங்கினர்.
மன்னன் , “நாம் மரணமடைந்து சுவர்க்கம் சென்று விட்டால் என்ன?” என்று யோசித்தான்.
பின்னர் அவன் மந்திரிகளிடம், “நீங்கள் சொல்வது சரிதான். இன்று மரணத்தை ஏற்று நானே சுவர்க்கம் செல்கிறேன்” என்று சொல்லியபடி அவனைக் கழுவிலேற்றவும் உத்தரவிட்டான்.
அந்நாட்டு வீரர்களும் மன்னனைக் கழுவிலேற்றினர். மன்னன் அலறியபடி உயிர் துறந்தான்.
மன்னன் இறப்பிற்குப் பின்னர் மக்கள் புத்திசாலியான அந்த மூவரையும் அந்நாட்டின் மன்னர்களாக இருக்கச் சொல்ல அவர்களும் மன்னர்களாக இருந்து சிறப்பாக ஆட்சி செய்தனர்.