பாண்டவர்கள் வனவாசம் முடித்த பிறகு அவர்களுக்குரிய நாட்டைத் திருப்பித் தரும்படி கேட்டு அவர்களின் தூதராக, கண்ணபிரான் அத்தினாபுரம் சென்றார்.
கண்ணன் செல்லும் வழியில் கண்ணனைப் பார்க்கப் பலரும் தங்கள் வீட்டின் முன்பு நின்றிருந்தனர்.
ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தன் தேரை நிறுத்திய கண்ணன், “இது யாருடைய வீடு?” என்று கேட்டார்.
எல்லோரும், “இந்த அழகிய மாளிகை என்னுடையது கண்ணா!” என்று கர்வமும், பெருமிதமும் பொங்கச் சொன்னார்கள்.
கண்ணன் தன் தேரிலிருந்து இறங்கவில்லை.
விதுரனின் வீடு வந்தது.
“இது யாருடைய வீடு?” என்று கண்ணன் தன்னுடைய வழக்கமான கேள்வியைக் கேட்டார்.
விதுரன் கண்ணனை வணங்கியபடி, “கண்ணா, உனக்குத் தெரியாததா? இது உன்னுடைய வீடல்லவா” என்று சொன்னான்.
விதுரனின் பதிலில் மகிழ்ச்சியுற்ற கண்ணன் தேரில் இருந்து இறங்கி விதுரன் வீட்டிற்குள் சென்றார்.
எனது, என்னுடைய என்கிற அகந்தையை ஒழித்தால்தான் ஆண்டவன் வந்து அருள் புரிவான் என்பது தெரிகிறதா?