மீனாட்சி என்பவள் ஒரு பாவமும் செய்யவில்லை என்று கர்வம் கொண்டிருந்தாள். எமதர்மன் அவளை சோதிக்க முடிவு செய்தார்.
ஒரு நாள் அவள் வீடு சுத்தப்படுத்தும் போது, ஒரு கரப்பான் பூச்சி தற்செயலாக அவளது துடைப்பத்தின் கீழ் பறந்து வந்து விழுந்து இறந்து போனது.
இதனால் மீனாட்சி வருத்தமடைந்தாள்.
இந்தப் பாவத்தை எப்படிப் போக்குவது என்று சிந்தித்தாள்.
இறந்து போன கரப்பான் பூச்சியைக் கையில் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் வந்தாள்.
தெருவில் இறங்கி நடந்தாள். வழியில் மீன் விற்கும் ஒரு பெண் வந்தாள்.
மீனாட்சி அவளிடம் பெருமையாக, “நான் வீட்டைச் சுத்தம் செய்யும் போது இந்த கரப்பான் பூச்சி என் துடைப்பத்தில் பட்டி இறந்து போய் விட்டது. இந்த இறந்து விட்ட கரப்பான் பூச்சியால் எனக்கு ஏற்பட்ட பாவத்தை எப்படிப் போக்குவது என்று தெரியாமல் தெருத்தெருவாகத் திரிகிறேன். நீயோ இத்தனை மீன்களைக் கொன்று பிழைக்கிறாயே, உனக்கு எவ்வளவு பாவம் சேரும்” என்று சொன்னாள்.
மீன் விற்பவள் மிகவும் பணிவுடன், “அம்மா, அந்தப் பூச்சியை என்னிடம் கொடுத்து விடுங்கள். எவ்வளவோ பாவத்தைச் சுமக்கிறேன். நீங்கள் செய்த பாவத்தையும் நானே சேர்த்துச் சுமக்கிறேன்” என்றாள்.
மீனாட்சிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. பூச்சியை அவளிடமே கொடுத்து விட்டாள். தன் பாவமனைத்தும் தீர்ந்து போய்விட்டதாக வீடு போய்ச் சேர்ந்தாள்.
மீனாட்சியும், மீன் விற்ற பெண்ணும் ஒரு நாளில் இறந்து போனார்கள்.
எமதர்மன் மீனாட்சியை நரகத்திற்கும், மீன் விற்ற பெண்ணை சொர்க்கத்திற்கு அனுப்பினார்.
இதைக் கண்ட மீனாட்சி எமதர்மனிடம், “தினமும் மீன்களைப் பிடித்துக் கொன்று விற்று வந்தவளுக்கு சொர்க்கம். எனக்கு நரகமா? இது ஏற்க முடியாதது” என்றாள்.
எமதர்மன், “பெண்ணே! மீன் விற்பது இவளுடைய தொழில். தொழிலுக்காகச் செய்தது பாவக்கணக்கில் இல்லை. நீ ஒரு கரப்பான் பூச்சியைக் கொன்று, அந்தப் பாவத்தை எப்படிப் போக்குவது என்று தெருத்தெருவாக அலைந்தாய். அந்தப் பாவத்தைத் தானாக வந்து இவள் சும்ந்ததால் இவள் புண்ணியம் பெற்றாள். எனவே அவள் சொர்க்கம் செல்லத் தகுதியானவள்தான்.” என்றார்.