தபோவனம் ஞானானந்தகிரி சுவாமிகளிடம் ஒரு அன்பர் சந்தேகம் ஒன்றைக் கேட்டார்.
“கல்லினுள் இருக்கும் தேரைக்கும் உணவு கொடுத்து அதன் உயிரைக் காப்பாற்றும் பரம தயாளன் என்று கடவுளைப் போற்றுகிறோம். ஆனால், வாழ்நாள் முழுவதும் உலக இன்பத்தைக் கண்டு களிக்காமல், உலகமே இன்னதென்று தெரியாமல் கல்லுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கும் தேரை உயிர் வாழ்வதில் என்ன பொருள் இருக்கிறது? தேரை இருப்பதால் அந்தக் கல்லும் பயன்படாமல், தேரையும் பழிச்சொல்லுக்கு ஆளாகிறது. இப்படிப்பட்ட தேரைக்கு உணவளித்து, உயிர் வாழ வைப்பது எப்படி தயாள குணமாகும்?”
ஞானானந்தகிரி சுவாமிகள் அளித்த விளக்கம் இதுதான்.
“ஒருவன் ஏதோ குற்றம் இழைத்து விடுகிறான். அவனை அரசாங்கம் சிறையில் அடைக்கிறது. சிறையில் அவன் அடைத்து வைக்கப்படுகிறான். ஆனால், அவனுக்கு உணவு அளிக்க அரசாங்கம் தவறுவதில்லை. ஏனென்றால், அவனுக்கு அளிக்கப்பட்டது சிறைத் தண்டனைதான். தவிர மரண தண்டனையல்ல. அந்தச் சிறைத்தண்டனையை அவன் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அவனுக்கு உணவு அளித்து உயிருடன் வைத்திருப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகிறது. கரும வினையினால் கல்லினுள் அடைபட்டுக் கிடக்கும் தேரையின் நிலையும் இதுதான்.
வினைப் பயனை அனுபவித்து அது விமோசனம் பெற வேண்டும் என்கிற கருணையினால்தான், அது எப்படியாவது உணவைப் பெற்று உயிர் வாழச் செய்கிறார் கடவுள்”
சுவாமிகளின் விளக்கம் கேட்டு அங்கிருந்த அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.