ஒரு மன்னரின் அரசவையில் நான்கு அமைச்சர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரை முதன்மை அமைச்சராக்க அரசர் விரும்பினார்.
நான்கு அமைச்சர்களும் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கினர். அவர்களில் யாரை முதன்மை அமைச்சராக்குவது என்று யோசித்தார்.
அவர்களுக்கு ஒரு தேர்வு வைத்து அதில் வெல்பவரை முதன்மை அமைச்சராக்கி விடுவது என முடிவு செய்தார்.
மன்னர் நான்கு அமைச்சர்களையும் அழைத்து, “நான் உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன். இந்தப் போட்டியில் வெல்பவருக்கு இந்த அவையில் முதன்மை அமைச்சர் பதவி அளிக்கப்படும்” என்றார்.
அவர்கள் போட்டி என்னவாக இருக்கும்? என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.
மன்னர் அவர்களிடம், “என்னிடம் கணித முறைப்படித் தயாரிக்கப்பட்ட ஒரு பூட்டு ஒன்று இருக்கிறது. நாளைக் காலை அரசவைக்குக் கொண்டு வரப்படும் அந்தப் பூட்டை விரைவாக யார் திறக்கிறார்களோ அவருக்கு முதன்மை அமைச்சர் பதவி அளிக்கப்படும்” என்றார்.
நான்கு அமைச்சர்களும் அங்கிருந்து சென்று விட்டனர்.
மூன்று அமைச்சர்கள் பகல் பொழுது முடிந்து இரவு முழுக்க பூட்டை எப்படி விரைவாகத் திறக்கலாம் என்று பல்வேறு கணித நூல்களையும் படித்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் ஒரு அமைச்சர் மட்டும்,சிறிது நேரம் புத்தகத்தைப் பார்த்து விட்டு இரவானதும் தூங்கச் சென்று விட்டார்.
மறு நாள் காலை அரசவைக்கு பெரிய அளவிலான அந்தப் பூட்டு கொண்டு வரப்பட்டது.
அந்தப் பூட்டைப் பார்த்தவர்கள் அனைவரும் அசந்து போனார்கள். அவ்வளவு பெரிய பூட்டை அன்றுதான் அனைவரும் பார்க்கின்றனர்.
இரவு முழுக்க விழித்திருந்து பல புத்தகங்களைப் படித்த அமைச்சர்கள் ஒவ்வொருவராக அந்தப் பூட்டைத் திறந்து பார்க்க முயன்றனர். அவர்களால் அது முடியவில்லை என்று பின் வாங்கினர்.
கடைசியாக, இரவு தூங்கச் சென்ற அமைச்சர் பூட்டை வந்து பார்த்தார். அந்தப் பூட்டு பூட்டப்படவே இல்லை. திறந்தே இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டார். அவர் எளிதாகப் பூட்டைத் திறந்து காண்பித்தார்.
அவரே முதன்மை அமைச்சரானார்.
எந்த ஒரு பிரச்சனைக்கும் அதைப் புரிந்து கொள்வதுதான் முதல் தீர்வு.