பாலைவனம் தோன்றியது எப்படி?
முதன் முதலில் கடவுள் இந்த உலகத்தைப் படைத்த போது எங்கும் பசுமையான வயல்களும் பூஞ்சோலைகளும் கனி மரங்களும் நிறைந்து மிக அழகாகக் காட்சி அளித்தது. உலகில் எங்குமே பாலைவனமே இல்லை.
அதன் பிறகு இந்த உலகத்தைப் பார்த்துக் கொள்வதற்காக மனிதனைப் படைத்தார்.
மனிதனைப் பார்த்து அவர், " நீ ஒவ்வொரு முறை பாவம் செய்யும் போதும் வானத்தில் இருந்து சிறிதளவு மணல் பூமியில் கொட்டும். கவனமாக நடந்து கொள்." என்று சொல்லிவிட்டு மறைந்தார்.
"இவ்வளவு பரந்த பூமியில் சிறிதளவு மணல் கொட்டுவதால் என்ன கெடுதல் நிறைந்து விடப்போகிறது? என் விருப்பம் போல வாழ்வதால் எந்தத் தவறும் இல்லை." என்று நினைத்தான் மனிதன்.
தன் விருப்பம் போலப் பாவங்கள் செய்யத் தொடங்கினான். ஒவ்வொரு பாவத்திற்கும் சிறிது மணல் விழுந்தது. தொடர்ந்து பாவங்கள் செய்து வந்தான். அதனால் மணல் விழுந்து விழுந்து ஏராளமான பாலைவனங்கள் தோன்றின.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.