கடவுள் என்பது யார்? பிரம்மன் என்பதன் பொருள் என்ன? என்று கேட்டான் சீடன்.
குருநாதர் பதில் சொல்லவில்லை. அமைதியாக இருந்தார்.
சிறிது நேரம் கழித்து சீடன் மறுபடியும், “பரப்பிரும்மம் என்று சொல்லப்படும் பேருண்மை என்பது என்ன” என்று கேட்டான்.
குருநாதர், “உம்... உம்...” என்று சொல்லிவிட்டு மவுனமானார்.
சீடனுக்கு விளங்கவில்லை.
தொடர்ந்து பன்னிரண்டு தடவை, “பரப்பிரும்மம் என்பதை ஏதாவது ஒரு விதத்தில் வடிவமைத்துக் காட்ட முடியுமா?” என்று கேட்டான்.
“அஉம்... அஉம்...” என்று சொல்லிவிட்டு மௌனமானார் குருநாதர்.
சீடன் அவ்ரைப் பணிந்து, “சுவாமி எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை... எனக்குப் பதிலளித்து உதவுங்கள்” என்றான்.
“சீடனே உன் கேள்விகள் அனைத்துக்கும் நான் உடனுக்குடன் பதில் சொல்லி விட்டேனே” என்றார் குருநாதர்.
“எனக்கு எதுவும் விளங்கவில்லை சுவாமி..” என்றான் மறுபடியும்...
குருநாதர், “பிரும்மம் என்பதன் பொருளைக் கேட்ட போது நான் அது அமைதியே அதன் நிலை என்பதை மௌனமாக இருந்து காட்டினேன். பரப்பிரும்மம் என்பது என்ன என்று நீ கேட்ட போது அது நீ உனக்குள்ளே ஏற்றுக் கொள்வது என்பதைக் காட்ட “உம்...உம்...” என்று சொல்லிக் காட்டினேன். கடைசியாக நீ அதற்காக ஓர் ஒலி வடிவம் கேட்டார். நான் ஓங்காரத்தைச் சொல்லிக் காட்டினேன். இபோது புரிகிறதா?” என்றார்.
சீடன் அவரது கால்களில் விழுந்து வணங்கினான்.