ராமபாணத்தை மார்பில் தாங்கி விழுந்து கிடந்தான் வாலி.
அவன் ராமன் தன் மீது அம்பெய்த காரணத்தை அறிகிறான்.
உடனே, “ராமா, சீதையைச் சிறை மீட்க நீ என் துணையை நாடியிருக்கக் கூடாதா? ஒரு நொடியில் அதைச் சாதித்துக் கொடுத்திருப்பேனே? என்னைக் கண்டாலே அஞ்சும் ராவணன், நான் ஒரு வார்த்தை சொன்னாலே சீதையை அனைத்து மரியாதைகளுடன் அழைத்து வந்து உன்னிடம் ஒப்படைத்து விட்டு மன்னிப்பும் கேட்கச் செய்திருப்பேனே” என்றான் வாலி.
“வாலி, நீ சொல்வது உண்மையாக இருக்கலாம். பிறன் மனைவியைச் சிறை எடுத்துச் சென்றவன் இராவணன். நீயும் அதே தவறைச் செய்திருப்பவன்தான்.ஒரு குற்றவாளியை எதிர்கொள்ள, இன்னொரு குற்றவாளியையா துணை கொள்வது? சுக்ரீவன் இன்று நானிருக்கும் நிலையிலேயே இருப்பவன். அவன் துணையுடன் இராவணனைத் தண்டித்துச் சீதையைச் சிறை மீட்பதுதான் சரியானது” என்றான் ராமன்.