காளி கோயில் ஒன்றில் பூசாரி ஒருவன் பூசை செய்து கொண்டிருந்தான்.
மார்கழி மாதம் விடியற்காலையில் குளிர்ந்த நீரில் மூழ்கிக் காளி கோயிலுக்குத் தயிர்ச்சாதம் நிவேதனம் செய்வான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருடைய அன்பளிப்பைப் பெற்று அதைச் செய்து கொண்டிருந்தான்.
தட்டில் பணம் போடுபவர்களுக்கு அதிகமாகத் தயிர்ச்சாதம் தருவான். குழந்தைகள் கேட்டால் பெயருக்குக் கையில் தடவி அனுப்புவான்.
ஒரு நாள், அந்தப் பூசாரிக்கு உணவு மாறுபாட்டால் காய்ச்சல் வந்தது. அதற்கு தகுந்த மருந்து சாப்பிட வேண்டும் என்கிற அறிவில்லாதவன் அவன்.
அவன் இதற்காகக் காளிதேவியிடம், “தாயே, இந்தக் காய்ச்சலிலிருந்து என்னைக் காப்பாற்றினால், உனக்கு இரு ஆடுகளைப் பலி கொடுக்கிறேன்” என்று வேண்டினான்.
அவன் மனைவி அவனது காய்ச்சலுக்குத் தகுந்த மருந்தை செய்து கொடுத்தாள்.
அவனது காய்ச்சலும் நின்று விட்டது.
ஆனால், அவன் ஆடி மாதம் அம்மனுக்கு இரு ஆடுகளை வெட்டிப் பலி கொடுக்க முடிவு செய்தான்.
இரு ஆடுகளை நன்றாகக் குளிப்பாட்டி வெட்டுவதற்காகக் கொண்டு வந்து நிறுத்தினான்.
அந்த ஆட்டின் மேல் மஞ்சள் நீரைத் தெளித்தான். மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டதும் இயற்கையாகவே அந்த ஆடுகள் தலையைச் சற்று உதறின. இந்த உதறல் காளி தேவி ஆட்டை வெட்டுவதற்கு சம்மதித்து விட்டதாகத் தெரிவித்து வெட்டினான்.
அந்த நகரை ஆட்சி புரிந்த மன்னருக்கு ஒரு மகனும், அமைச்சருக்கு ஒரு மகனும் பிறந்தார்கள். இருவரும் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். இருவருமே அனைத்துக் கலைகளிலுமே வல்லவர்களாகவும் ஆனார்கள்.
மன்னன் தனக்குப் பின் மகனுக்கு முடிசூட்டு விழாவை நடத்தினான். அமைச்சரின் மகன் அவனுக்கு உதவியாக நியமிக்கப்பட்டான்.
மன்னன் மகனுக்கு முடிசூட்டிய பின்பு பல ஆண்டுகளாகப் பருவ மழை கூட பெய்யவில்லை. மழையில்லாததால் தண்ணீர் இல்லை. மக்களுக்குக் குடிக்கக் கூட நீரில்லாமல் தவித்தார்கள்.
ஒரு நாள் மன்னன் மகனும், அமைச்சர் மகனும் இரவு பத்து மணிக்கு மேல் காளி கோயிலுக்குச் சென்றார்கள்.
இதைக் கண்ட பூசாரி, தன்னுடைய தவறு ஏதாவது தெரிந்து தன்னைத் தண்டிக்க வருகிறார்களோ என்கிற அச்சத்தில் காளிதேவியின் சிலைக்குப் பின்னால் போய் ஒளிந்து கொண்டான்.
மன்னன் மகன் காளிதேவி முன்பு வணங்கியபடி, “தேவி, எனக்கு முடிசூட்டிய பின்பு பல ஆண்டுகளாக மழையில்லை. நீரின்றி மக்கள் அவதிப்படுகிறார்கள். அருள் புரிந்து மழை பெறச் செய்ய வேண்டும்” என்று வேண்டினான்.
காளிதேவி, “மன்னன் மகனே, என் கோயிலில் ஒரு நரபலி தந்தால் மழை பொழியும்” என்று அசரீரியாகக் கூறினாள்.
மன்னன் அமைச்சர் மகனைப் பார்த்து, “நண்பனே, மக்களுக்கு நான் தந்தை போன்றவன். மக்களுக்கு மழை கிடைக்கும் பொருட்டு என் உயிரைத் தியாகம் செய்ய வேண்டும். என்னைப் பலியிட்டுவிட்டு நீ அரசனாகப் பதவி ஏற்று அரசைச் சிறப்பாக நடத்து.” என்றான்.
அமைச்சர் மகனோ, “தங்களின் நண்பனாகிய நான் தங்களைப் பலியிடுவதா? வேண்டாம், நீங்கள் என்னைப் பலியிட்டு எனக்குப் பதில் சிறந்த ஒருவரைத் துணையாகக் கொள்ளுங்கள்” என்றான்.
இப்படியே இவர்கள் இருவருக்குள்ளும், “என்னைப் பலியிடு! என்னைப் பலியிடு...!” எனும் வாதம் தொடர்ந்தது.
உடனே மன்னன் மகன், “நாம் இருவரும் பலியிடுவதற்கு வாக்குவாதம் செய்வதை விட, காளிதேவியிடமே கேட்போம். அவர் யாரைப் பலியிடச் சொல்கிறாரோ, அப்படியே செய்வோம்” என்று கூறினான்.
“தேவியே, உன் கோயிலில் நான் பலியாக வேண்டுமா? இல்லை, அமைச்சரின் மகனான என் நண்பன் பலியாக வேண்டுமா? நீயே முடிவைச் சொல்ல வேண்டும்” என்று கேட்டான் மன்னன்.
அப்போது காளி தேவி, “மன்னனே, நீயும் பலியாக வேண்டாம், அமைச்சரும் பலியாக வேண்டாம். என் சிலைக்குப் பின்னால், ஒளிந்திருக்கும் பூசாரிதான் இங்கு பலியாக வேண்டும்” என்றாள்.
இதைக் கேட்ட பூசாரி நடுங்கியபடி சிலைக்குப் பின்பிருந்து வெளியே வந்தான். அவனுடைய கண்கள் சிவந்தன. மீசை படபடத்தது. புருவம் நெளிந்தது.
“காளி தேவியே, நீயெல்லாம் ஒரு தெய்வமா? உனக்கு ஐம்பது ஆண்டுகளுக்கும் அதிகமாகப் பூசை செய்து வருகிறேனே... என்னைப் போய்ப் பலியிடச் சொல்கிறாயே...உனக்குக் கருணையில்லையா? இவ்வுலகில் இருக்கும் அனைவரையும் காப்பவள் நீயில்லையா? நீயே பலி கொடுக்கச் சொல்லலாமா? நீ தெய்வமில்லை... நீ ஒரு அரக்கி” என்று வசைபாடத் தொடங்கினான்.
காளிதேவி, “பூசாரியே, படபடவென்று பேசாதே. பதற்றம் அடையாதே... உனக்கு அதிகமான உணவு உண்டு வந்து காய்ச்சல் வந்தால், அதற்கு மருந்து சாப்பிடாமல், என் கோயிலில் இரு ஆடுகளை வெட்டிப் பலி கொடுத்தாயே... அந்த ஆடுகள் செய்த பாவம்தான் என்ன? நான் இந்தப் புவியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் தாய் என்பதை இன்றுதான் உணர்ந்தாயா? வாயில்லாத அந்த உயிர்களை அன்று நீ பலியிட்டாய். இன்று அவை உன்னைப் பலி வாங்க மன்னனாகவும், அமைச்சராகவும் பிறந்து வந்திருக்கின்றன.” என்றாள்.
பூசாரிக்கு அப்போதுதான் தன் பழைய செயல்கள் நினைவுக்கு வந்தன.
பூசாரி மேல் தண்ணீர் ஊற்றப்பட்டு நனைய வைக்கப்பட்டான். அவன் மேல் மஞ்சள் நீர் சிறிது தெளிக்கப்பட்டது. அவன் அச்சத்துடன் தலையை உதறினான். மன்னன் அவன் தலையை வெட்டி வீழ்த்தினான்.
அப்போது அவன் முன் காளி தேவி தோன்றினாள்.
“மன்னனே, உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்.” என்றாள்.
மன்னன், “தாயே, இந்தப் பூசாரி குற்றத்தை உணர்ந்து கொண்டதுடன் ஒப்புக் கொண்டான். மன்னிப்பதுதான் கடவுள் இயல்பு. இவனை மன்னித்து உயிர்ப்பிதுடன் என் நாட்டிற்கு மழை பெய்து அனைத்து வளங்களும் கிடைத்திட அருள் புரிய வேண்டும்” என்றான்.
காளி தேவியும் அப்படியே பூசாரியை உயிர்ப்பித்ததுடன் மழையையும் பொழியச் செய்தாள்.
அன்று முதல் பூசாரி பலியிடும் வழக்கத்தைக் கோயிலிலிருந்து அகற்றினான்.