மகாபாரதத்தில் அனுமனைப் பற்றிய ஒரு சிறுகதை உள்ளது.
பீமன் சௌகந்திக மலரைக் கொண்டு வருவதற்காக இமாசலத்தில் ஏறும்போது வழியை மறைத்துக் கொண்டு அனுமன் ஒரு மலை போல் படுத்திருந்தார்.
அவரை ஏதோ ஒரு குரங்கு என்று நினைத்த பீமன், “ஏ குரங்கே! எழுந்து எனக்கு வழி விடு” என்று அதட்டினான்.
“அய்யா, நான் வயதானவன். நான் தூக்கக் கலகத்தில் இருக்கிறேன். என்னால் எழுந்திருக்க இயலவில்லை. அவசியமானால், என்னைத் தாண்டிப் போ” என்றார் அனுமன்.
உடனே பீமன், “நான் வேதங்களைக் கற்றதன் மூலம் பரமாத்மா எல்லா ஜீவராசிகளிலும் இருக்கிறார் என்பதையும் அறிந்துள்ளேன். அப்படி அறிந்திருக்காவிட்டால், உன்னையும், இந்த மலையையும் அனுமார், சமுத்திரத்தைத் தாண்டியது போல் தாண்டியிருப்பேன்” என்றான்.
இதைக் கேட்ட அனுமன், “அப்படியா? அனுமார் என்பவர் யார்?” என்று கேட்டார்.
பீமன், “ஓ, குரங்கே, நீ இராமாயணம் கதை கேட்டதில்லையா? அதில் வானர சிரேஷ்டரான என் சகோதரன். மிகச் சிறப்பு பெற்றவன். அவன் இலங்கையிலிருந்த சீதாதேவியைத் தரிசனம் செய்வதற்காக ஒரே தாண்டலில் சமுத்திரத்தைத் தாண்டினார். நான் அவருக்குச் சமமான பலமுடையவன். உன்னை அழிக்கக் கூடிய சக்தியுமுடையவன். நான் கூறியும் வழிவிடாமல் படுத்திருந்தால், உன்னை எம லோகம் அனுப்பி விடுவேன்” என்றான்.
அனுமன், “அய்யா, தாங்கள்தான் எனக்கு அருள் புரிய வேண்டும். தற்போதைய நிலையில் எனக்கு எழுந்திருக்கும் சக்தி இல்லை. தாங்கள் வேண்டுமானால் என் வாலை சிறிது தள்ளி வைத்துவிட்டுக் கடந்து செல்லுங்கள்” என்றார்.
பீமன் மிக அலட்சியமாக, தன் இடது கையால் அனுமன் வாலைப் பிடித்துத் தூக்க முயன்றான். ஆனால், வாலைச் சிறிது கூட நகர்த்த இயல்வில்லை. அவனுக்கு உடல் வியர்த்துக் கொட்டத் தொடங்கியது.
உடனே, “நான் சொன்ன வார்த்தைகளைப் பொருத்தருள வேண்டும். வானர உருவத்தில் இருக்கும் தாங்கள் சித்தரா? தேவரா? யட்சனா?” என்று பணிவுடன் கேட்டான்.
அனுமன் அவனுக்கு ராமசரித்திரத்தை முழுமையாகக் கூறி, சீதாதேவியைத் தேடுவதற்குச் சமுத்திரத்தைத் தாண்டிய அனுமன் நான்தான்” என்றபடி எழுந்து நின்றார்.
இரு சகோதரர்களும் ஒருவரையொருவர் கட்டிக் கொண்டனர்.
அதன் பிறகு அனுமனிடம் விடை பெற்றுச் சென்றான் பீமன்.