இரண்டு இளைஞர்கள் ஒரு ஆற்றின் கரையோரம் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஆற்றில் இரு பெண்கள் மூழ்கும் நிலையில் இருந்தனர். அவர்கள் தங்கள் கைகளை மேல்நோக்கிக் காணிபித்துத் தங்களைக் காப்பாற்ற வேண்டிக் கொண்டிருந்தனர்.
இதைக் கண்ட இரண்டு இளைஞர்களும் ஆற்றில் குதித்தனர். மூழ்கிக் கொண்டிருந்த இரண்டு பெண்களையும் காப்பாற்றிக் கரைக்குக் கொண்டு வந்தனர்.
காப்பாற்றப்பட்ட இரண்டு பெண்களும் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இரண்டு இளைஞர்களில் ஒருவன் தான் காப்பாற்றிய பெண்ணிடம், “உன்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றியதிலிருந்து எனக்கு உன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை எனக்குள் வந்து விட்டது. என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று வேண்டினான்.
மற்றொருவன், தன்னை விட வயதில் முதிர்ந்தவர்களைத் தாயாகவும், சம வயதுடையவர்களை சகோதரிகளாகவும், சிறுமியர்களைத் தனது புதல்வியராகவும் கருதும் எண்ணமுடையவன்.
அவன் தான் காப்பாற்றிய பெண்ணிடம், “சகோதரி, உன்னைக் காப்பாற்றும் பாக்கியத்தை எனக்கு இறைவன் கொடுத்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்” என்றான்.
இதில் முதலாமவன், “இந்த உலகமே உண்மை” என்கிற எண்ணமுடையவன். இரண்டாமவன், “இறைவன் மட்டுமே உண்மை” என்கிற எண்ணமுடையவன்.
வெளியில் இருவரும், இரண்டு பெண்களைக் காப்பாற்றுவதில் ஒன்றாக இருந்தனர். ஆனால், மனதில் இருவரும் இருவேறு எண்ணங்களுடையவர்களாக இருக்கின்றனர். இதனால் பலனும் வேறுவேறாகவே அமைந்தது.