மன்னர் கிருஷ்ண தேவராயர் அவருடைய தாயார் மேல் மிகுந்த பிரியம் வைத்திருந்தார். வயோதிகத்தில் நோய் வாய்ப்பட்டிருந்த அவரது தாயாருக்கு எவ்வளவு வைத்தியம் செய்தும் நோய் தீர்வதாக இல்லை. வைத்தியர் தாயின் கடைசி ஆசையைக் கேட்டு நிறைவேற்றும்படி சொல்லிச் சென்று விட்டார்.
மன்னரும் அவரது தாயாரிடம் சென்று, "அம்மா, உங்களுக்கு எது சாப்பிட மிகவும் ஆசையாக இருக்கிறது?" என்று கேட்டார். அதற்கு அவரது தாயாரும் "மாம்பழம் தான் வேண்டும்." என்றார். அப்போது மாம்பழம் கிடைக்கக் கூடிய காலமல்ல. இருப்பினும் மன்னர் தன் வீரர்களை அனுப்பி எப்படியாவது மாம்பழம் கொண்டு வரும்படி உத்தரவிட்டார்.
மாம்பழம் வந்து சேர்வதற்குள் அவரது தாயார் மரணமடைந்து விட்டார்.
தாயாரின் கடைசி ஆசையான மாம்பழம் சாப்பிடாமல் அவர் மரணமடைந்தது குறித்து மன்னர் மிகவும் மனம் வருந்தினார். அதற்கு பரிகாரம் செய்து கொள்ள புரோகிதர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
மன்னரின் மன வருத்தத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள ஆசைப்பட்டனர் புரோகிதர்கள். மன்னரிடம் பேராசையோடு அவரது தாயாரின் ஆன்மா சாந்தியடைய, 108 புரோகிதர்களுக்கு 108 தங்கமாங்கனிகள் கொடுத்தால் சரியாகிவிடும் என்றனர் புரோகிதர்கள்.
மன்னரும் அப்படியே செய்தார். பேராசைக்கார புரோகிதர்கள் தங்கமாங்கனியைப் பெற்றுச் சென்றனர்.
இதைக் கேள்விப்பட்ட தெனாலிராமன் வருத்தப்பட்டான். பேராசைக்காரர்களான அந்த புரோகிதர்களுக்கு பாடம் புகட்ட எண்ணினான். அதன்படி செயல்பட தீர்மானித்தான்.
ஒருநாள் அந்த புரோகிதர்களைச் சந்தித்து, "என் அம்மாவிற்கு திதி வருகிறது. அதற்குத் தாங்கள் அனைவரும் வந்து புரோகிதம் பண்ணுங்கள். என்னால் முடிந்த அளவு தருகிறேன்." என்றான்.
புரோகிதர்களும் மகிழ்ச்சியுடன் தெனாலிராமன் வீட்டிற்குச் சென்றனர். அவனும் புரோகிதர்களை வரவேற்று உட்காரச் செய்தான். பின்பு கதவுகளைத் தாழிட்டுப் பூட்டிக் கொண்டான். ஏற்கனவே நன்கு பழுக்கக் காய்ச்சிய கம்பிகளால் ஆளுக்கு ஒரு சூடு போட்டான்.
புரோகிதர்கள் "அய்யோ, அம்மா" என்று கதறினார்கள். பின் வேதனையுடன் மன்னரிடம் சென்று முறையிட்டனர்.
இதைக் கேட்ட மன்னர் மிகவும் கோபமடைந்தார். தெனாலிராமனை உடனடியாகக் கட்டி இழுத்து வரும்படி உத்தரவிட்டார்.
தெனாலிராமனிடம், "புரோகிதர்களுக்கு ஏன் சூடு போட்டாய்?" என்று கேட்டார்.
"மன்னா என்னை மன்னிக்க வேண்டும். என் தாய் உடல் நலமில்லாதிருந்து இறக்கும் தருவாயில் வலிப்பு நோய் வந்து விட்டது. அதற்கு வைத்தியர்கள் என் தாயாருக்கு சூடு போடும்படி சொன்னார்கள். ஆனால் நான் சூடு போடுவதற்கு முன்பு என் தாயார் இறந்து விட்டார்கள். ஆகையால் என் தாயார் ஆன்மா சாந்தியடைய புரோகிதர்களுக்கு சூடு போட வேண்டுமென்று பெரியவர்கள் சொன்னார்கள். அதன்படிதான் சூடு போட்டேன். இதில் என்ன தப்பு? " என்று கேட்டான்.
இதைக் கேட்ட மன்னர் கோபத்துடன், " இது முட்டாள்தனமாகத் தெரியவில்லையா?" என்றார்.
தெனாலிராமனும், " இல்லை அரசே, விளக்கமாகக் கூறுகிறேன். சற்று அமைதியாகக் கேளுங்கள். முன்பு உங்கள் தாயார் மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால், அவருடைய ஆன்மா சாந்தியடைய 108 தங்க மாங்கனிகள் 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால்தான் அவர்களது ஆன்மா சாந்தியடையும் என்று சொன்னார்களே... அதன்படி தாங்களும் கொடுத்தீர்களே... அது போலத்தான் என் தாயாரின் வலிப்பு நோய்க்கு சூடு போட முடியாமல் போனதால்தான் இவர்களுக்கு சூடு போட்டேன்" என்றான்.
இதைக் கேட்ட மன்னர் சிரித்தபடி தெனாலிராமனைப் பாராட்டினார். கூடவே புரோகிதர்களின் பேராசைக்கு இந்தத் தண்டனை சரிதான் என்று நினைத்துக் கொண்டார்.