திரௌபதி யமுனை நதியில் நீராடுவதற்காகச் சென்றாள்.
அங்கு துர்வாச முனிவர் நீராடிக் கொண்டிருந்தார். அவர் நீராடிக் கொண்டிருந்த போது, அவர் இடுப்பில் கட்டியிருந்த ஆடை நீரின் சுழல் வேகத்தில் கழன்று ஆற்றுடன் போய் விட்டது.
இடுப்பில் துணி எதுவுமில்லாமல், வெளியே வரக் கூச்சப்பட்ட முனிவர் தயக்கத்துடன் தண்ணீருக்குள் நின்று கொண்டிருந்தார்.
முனிவரின் தவிப்பை உணர்ந்த திரௌபதி தான் குளிப்பதற்காக உடுத்தியிருந்த ஆடையின் ஒரு முனையைக் கிழித்து ஆற்று நீரில் விட்டாள்.
திரௌபதி ஆற்றில் விட்ட அந்தத் துணியை இடுப்பில் கட்டிக் கொண்டு தண்ணீரிலிருந்து வெளியேறினார் முனிவர்.
அவருக்கு மனமெல்லாம் நன்றிப் பெருக்கு. தன் ஆத்ம தெய்வமான கண்ணனிடம் வேண்டுகிறார்.
“கண்ணா! என் மானம் காத்த இந்த திரௌபதிக்கு இது போன்ற இக்கட்டான சூழ்நிலை வரும் போது,நீதான் அவளைக் காத்து அருள வேண்டும்...”
முனிவரின் வேண்டுதலை ஏற்றார் கண்ணன்.
இதனடிப்படையில்தான், துரியோதனன் சபையில் திரௌபதியின் சேலை உரியப்பட்ட போது, கண்ணன் அருளால் அவளது சேலை வளர்ந்து கொண்டே இருந்தது.