அரசன் ஒருவன் தன் நாட்டு மக்களுக்கு வித்தியாசமான ஒரு போட்டியை அறிவித்தான்.
அந்தப் போட்டி இதுதான்.
“போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்களுக்கு ஆடு ஒன்று வழங்கப்படும். அந்த ஆட்டை முப்பது நாட்கள் கழித்துத் திரும்பக் கொண்டு வர வேண்டும். திருப்பிக் கொண்டு வரப்படும் ஆடு எடை கூடினாலோ அல்லது குறைந்தாலோ மரண தண்டனை விதிக்கப்படும். அதே எடையுடன் தந்தால் அவர்கள் கேட்கும் செல்வம் அளிக்கப்படும்”
அரசனின் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளப் பலரும் பயந்து போய் இருந்தனர். ஒருவர் கூட இந்தப் போட்டியில் கலந்து கொள்ள முன்வரவில்லை.
இந்நிலையில் மலைப் பகுதியைச் சேர்ந்த ஒருவன் அரசனின் நிபந்தனையை ஏற்று ஆட்டை வளர்க்க முன் வந்தான்.
அரசனும் தனது நிபந்தனைகளைத் தெரிவித்து, ஆட்டை அவனிடம் கொடுத்து அனுப்பினான்.
முப்பது நாட்கள் கழிந்தன. அவன் ஆட்டுடன் திரும்ப வந்தான்.
அரசன் அந்த ஆட்டை எடை போடச் சொன்னான். என்ன ஆச்சர்யம்! அந்த ஆடு எடை கூடவுமில்லை, குறையவுமில்லை. அதன் எடை அப்படியே இருந்தது.
அரசன் ஆச்சர்யமடைந்தான். “இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது?”
உடனே அவன், “இது மிகவும் சாதாரணமான விசயம். நீங்கள் என்னிடம் கொடுத்த ஆட்டை ஒரு கூண்டில் அடைத்தேன். கூண்டின் மறுபகுதியில் ஒரு புலியை அடைத்து வைத்தேன். ஆட்டிற்கு வழக்கம் போல் உணவிட்டேன். அதைச் சாப்பிட்ட ஆடு, புலியைப் பார்த்து, இது நம்மைக் கொன்று விடுமோ என்று பயந்து கொண்டே இருந்தது. அதனால், ஆட்டின் எடை கூடவுமில்லை, குறையவுமில்லை. பயமிருப்பவனுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் இருப்பதில்லை.” என்றான்.
அரசனுக்குப் புரிந்தது.