மகாபாரதப் போரின் இறுதியில் கர்ணன் வில்லால் அடியுறாமல் தர்மம் அவனைக் காத்தது.
உடனே கண்ணன் கர்ணனிடம் வந்து, “உன் புண்ணியத்தை எல்லாம் தந்து விடு” என்றதும் கர்ணன் அதையும் தானமாகக் கொடுக்கிறான். ஆனால், இப்புண்ணியத்தையெல்லாம் கொடுப்பதே பெரும் புண்ணியமல்லவா? அப்படியானால் அந்தப் புண்ணியத்துக்கு என்ன கிடைக்கும்?
கர்ணன் முன்பு தான, தருமங்கள் செய்த போது, பயன் கருதிச் செய்தான். பயன் கருதிச் செய்யும் புண்ணியம் காமியம் எனப்படும்.
இறைவனுக்குப் புண்ணியத்தை வழங்கிய போது பயன் கருதாமல், அதை நிஷ்காமியமாகச் செய்தான். அதனால் அதற்கு மேல் சிறந்த புண்ணியம் எதுவுமில்லை.
புண்ணியம் என்பது பொன் விலங்கு, பாவம் என்பது இரும்பு விலங்கு.
புண்ணியம் செய்தவர் மேலான பிறவியை அடைவர். பாவம் செய்தவர் கீழான பிறவியை அடைவர்.பிறவியை மாற்றக் கருதும் அருளாளர்கள் புண்ணியத்தை நிஷ்காமியமாகச் செய்வர். அதனால் அது அடுத்த பிறவியைத் தராது. அதைத்தான் கர்ணன் செய்தான்.
இந்தக் காரணத்தால், கர்ணன் இறைவனுக்குத் தான் செய்த புண்ணியத்தை வழங்கினான்.
கர்ணன் முதலில் செய்த அனைத்துத் தர்மங்களும் அவனுக்குப் புகழைத் தந்தன. அவன் கடைசியாகச் செய்த புண்ணியம்தான் அவனுக்கு மோட்சத்தைத் தந்தது.