அந்த ஒட்டகம் மெதுவாகத் தன் மூக்கைக் கூடாரத்துக்குள் நுழைத்தது.
அதைக் கவனித்த அதன் முதலாளி. “சீச்சீ...இங்கே வராதே போ!” என்று கத்தினான்.
“கோபித்துக் கொள்ளாதீர்கள். மூக்கை மட்டுமே உள்ளே வைத்திருப்பேன்” என்றது ஒட்டகம்.
அதற்கு முதலாளி அரை மனதுடன் சம்மதித்தான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு ஒட்டகம் தன் முகத்தை உள்ளே நுழைத்தது. பின்னர் அது தன் கழுத்து, வயிறு என்று முழு உடம்பையும் கூடாரத்துக்குள் நுழைத்து விட்டது.
ஒட்டகத்தின் நாற்றத்தைப் பொறுக்க முடியாமல், முதலாளி முடிவில் கூடாரத்தை விட்டு வெளியேறினான்.
மனம் நம்மை ஏமாற்றுகிறது. சூட்சுமமாக நமக்குள் மறைந்திருக்கும் உலக ஆசைகள் பல. சமயங்களில், கடமை, தயை, சேவை என்ற பல பெயர்களை எடுத்துக் கொண்டு பல முகமூடிகளை அணிந்து, நமக்குள் நுழைந்து விடுகின்றன. பின்னர் அவற்றால் நம்முள்ளிருக்கும் நல்லவையெல்லாம் வெளியேற்றப்படுகின்றன.
எனவே நம்முடைய தொடர்பு எப்பொழுதும் நல்லவர்களுடன் மட்டுமே இருக்க வேண்டும்.