மகான் ஏகநாதர் கோபம் எதுவும் கொள்ளாதவராக இருந்து வந்தார்.
அவருக்கு எப்படியாவது கோபத்தை ஏற்படுத்திப் பார்க்க வேண்டும் என்று சிலர் தீர்மானித்தனர். அவரைக் கோபப்படுத்துபவருக்கு பரிசு தருவதாகவும் அறிவிப்பு செய்தனர்.
இதைக் கேட்ட பிராமண இளைஞன் ஒருவன் அதைச் செய்ய முன் வந்தான்.
மறுநாள் காலையில், அந்த இளைஞன் ஏகநாதரின் வீட்டிற்குச் சென்றான். அப்போது, ஏகநாதர் பூஜையறையில் பூஜை செய்து கொண்டிருந்தார்.
அந்த இளைஞன் கைகால்களைக் கழுவாமல், எவரிடமும் எதுவும் கேட்காமல் நேராகப் பூஜையறைக்குச் சென்றான்.
அங்கு ஏகநாதர் ஒருமுகப்பட்ட நிலையில் பூஜை செய்து கொண்டிருந்தார். இளைஞன் நேரே ஏகநாதரின் மடிமீது போய் உட்கார்ந்து கொண்டான்.
இப்படிச் செய்தால் அவர் கோபப்படுவார் என்று எதிர்பார்த்தான்.
ஆனால் ஏகநாதர் கோபப்படவில்லை. அதற்குப் பதிலாக, “குழந்தாய்! உன்னைப் பார்த்து எனக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. நானும் எவ்வளவோ பேரைச் சந்தித்திருக்கிறேன். ஆனால், உன்னைப் போல் இவ்வளவு அன்புடன் யார் மடிமீது அமர்ந்து கொண்டதில்லை. உன் அன்பே விநோதமானது” என்றார்.
அந்த இளைஞன் ஏமாற்றத்துடன் அவரையேப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தான்.
அவனுக்குத்தான் பரிசைப் பெற முடியாமல் போய்விட்டதே என்று கோபமேற்பட்டது. ஆனால், பொறுமையாகக் காத்திருந்தான்.
உணவுவேளை வந்தது.
ஏகநாதருக்கு அருகிலேயே அவனுக்கும் இலை போடப்பட்டு இருந்தது. இருவரும் உணவுக்கு வந்து அமர்ந்திருந்தனர்.
ஏகநாதரின் மனைவி கிரிஜாபாய் உணவு வகைகளைப் பரிமாறினார். அவர் நெய்யை இலையில் இடுவதற்காகக் குனிந்தார்.
இதைப் பார்த்த அந்த இளைஞன் கிரிஜாபாயின் முதுகின் மேல் ஏறி அமர்ந்து கொண்டான்.
இந்தச் செயல் நிச்சயம் ஏகநாதரின் ஆத்திரத்தைக் கிளப்பிவிடும் என்று அவன் நினைத்தான். ஆனால் அவனுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
ஏகநாதரே மிகவும் அமைதியாக மனைவியைப் பார்த்து, “கிரிஜா! ஜாக்கிரதை!! இளைஞர் கீழே விழுந்து விடப் போகிறார்” என்றார்.
கிரிஜாபாய் கணவரிடம், “பயப்படாதீர்கள், எனக்கு நமது குழந்தை ஹரியை முதுகின் மீது சுமந்து கொண்டு காரியங்கள் செய்வது பழக்கம். இந்தக் குழந்தையைக் கீழே போட்டு விடுவேனா?” என்று கூறினாள்.
தம்பதிகளின் பெருமைக்குரிய செயல்களைக் கண்டும் அவர்களின் அமைதியான பேச்சைக் கேட்டும் அவன் வியப்படைந்தான்.
கிரிஜாபாயின் முதுகிலிருந்து குதித்து ஏகநாதரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோரினான்.