“மகனே! உன்னுடைய காலில் இரத்தக்கறை படிந்திருக்கிறதே... எங்காவது விழுந்து காயமேற்பட்டுள்ளதா?” என்று தாய் அன்புடன் கேட்டாள்.
“கோடாரியால் என் காலை வெட்டிப் பார்த்தேன். அதனால்தான் என் காலிலிருந்து இரத்தம் வடிகிறது” என்றான் மகன்.
”நீ என்ன மூடனா? எவனாவது தன் காலைத் தானே வெட்டிக் கொள்வானா? உனக்கு பித்து எதுவும் பிடித்து விட்டதா?” என்றபடி மகனின் ஆடையை விலக்கிக் காயத்தைப் பார்த்தாள் தாய்.
அவனுடைய காலில் காயம் பெரியதாக இருந்தது. ஆனால், அவனோ வலி சிறிது கூட இல்லாதவனாக நின்றிருந்தான்.
“மகனே, உன் காலை நீயே வெட்டி இவ்வளவு பெரிய காயத்தை ஏற்படுத்தியிருக்கிறாயே? இன்னும் சிறிது ஆழமாகப் பட்டிருந்தால் காலையேத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். ஏன் இப்படி செய்தாய்?” என்று கேட்டாள்.
“அம்மா, நான் பூவரச மரத்தை வெட்டி அதன் பட்டையை அன்று பெயர்த்தேன். அதற்கு வலி ஏற்படுமோ என்று ஒரு சந்தேகம் எனக்குத் தோன்றியது. அதைத் தெரிந்து கொள்வதற்காக என் காலை வெட்டிப் பார்த்தேன். உண்மையை உணர்ந்து கொண்டேன்” என்றான் அவன்.
பூவரசு பட்டையைக் கொண்டு வருமாறு தாம் மகனை ஏவியது தாயாரின் நினைவுக்கு வந்தது.அவள் விம்மி விம்மி அழுதாள்.
அவள் மகனைப் பார்த்து, “மகனே! நீ பிற்காலத்தில் ஒரு மகானாக இருப்பாய். மரங்களிடமும், ஏனைய உயிரினங்களிடமும் நம்மிடம் இருக்கும் உயிர்தான் இருக்கிறது. நமக்கு ஏற்படும் உணர்வுகள்தான் அவற்றிற்கு ஏற்படும். பட்டையைப் பெயர்த்தால் மரத்திற்குத் துன்பம் உண்டாகும்” என்று கூறினாள்.
அந்தத் தாயின் கணிப்பு வீண்போகவில்லை. அவர் மகான் நாமதேவர் என புகழ் பெற்றார்.