“கலீபாஹசரத்” என்று ஒருவர் இருந்தார். இவர் அரசாங்கக் கணக்கு, வழக்குகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் பணியை மேற்கொண்டிருந்தார்.
ஒருநாள் இரவு வீட்டில் அரசுப் பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது, அவரைக் காண ஒரு கணவான் வந்திருந்தார்.
வந்தவர் தன் சொந்த வேலை காரணமாக வந்திருந்தார் என்பதைக் கலீபா புரிந்து கொண்டார்.
உடனே கலீபா, தான் பயன்படுத்திக் கொண்டிருந்த விளக்கை அணைத்து விட்டு, அதே இடத்தில் வேறொரு விளக்கை ஏற்றி வைத்துக் கொண்டார்.
கலீபாவின் இந்தச் செயல், அவரைப் பார்க்க வந்தவருக்கு வினோதமாகப் பட்டது.
இருப்பினும், தன் ஆவலை அடக்கிக் கொண்டு கலீபாவிடம் வந்த வேலையை முடித்துக் கொண்டார்.
பார்வையாளர் வேலை முடிந்த மறுகணமே, கலீபா அந்த இரண்டாவது விளக்கை அணைத்து விட்டு, முதல் விளக்கை ஏற்றிக் கொண்டார்.
இதைக் கண்ட பார்வையாளர் தனது ஆவலை மேலும் அடக்க முடியாமல், கலீபாவிடம் அவரது செயலுக்கான காரணத்தைக் கேட்டார்.
அதற்குக் கலீபா அவர்கள், “ஐயா, தாங்கள் வந்த போது நான் என்னுடைய அரசாங்க வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்காக அரசாங்கம் கொடுத்த விளக்கைப் பயன்படுத்தினேன். உங்களுடைய சொந்த விசயங்களைப் பற்றிப் பேசும் போது அரசாங்கப் பணத்தைச் செலவழிக்கலாமா? அதனால்தான் உங்களுடன் பேசும் போது என்னுடைய சொந்த விளக்கைப் பயன்படுத்தினேன்” என்று பதிலளித்தார்.
இதைக் கேட்ட பார்வையாளர், “இப்படியும் ஒரு நேர்மையானவரா?” என்று ஆச்சரியப்பட்டார்.