ஏகநாலா என்ற கிராமத்தைச் சேர்ந்த பரத்வாஜன் என்ற செல்வந்தனான ஒரு விவசாயி தன்னுடன் உழுது கொண்டிருந்த கூலி ஆட்களை, மாடுகளை அவிழ்த்து விட்டுவிட்டு ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு கூறினான்.
நண்பகல் நேரம் அது.
அனைவரும் மரத்தடி நிழலில் அமர்ந்து, மதிய உணவைச் சாப்பிடத் தொடங்கினர்.
அச்சமயத்தில் அந்தப் பக்கமாக ஓர் ஏழைச் சந்நியாசி வந்தார். கையில் ஓடேந்தி மவுனமாக நின்றார்.
பரத்வாஜன் உணவுக்காக நிற்கும் இந்தச் சந்நியாசியைப் பார்த்தான்.
அவனுக்கு ஏளனமாக இருந்தது. “ஓய், சந்நியாசியே! எதற்கு இப்படி பிச்சை எடுத்துப் பிழைக்கிறீர்? எங்காவது போய் வயலில் உழுது, உழைத்துப் பிழைக்கக் கூடாதா? என்னைப் பார். எனக்கு சோம்பேறித்தனமே பிடிக்காது. வயலை உழுது, விதையை ஊன்றிய பிறகுதான் நான் சாப்பிட வந்திருக்கிறேன்” என்றான்.
சந்நியாசி மெல்ல நகைத்தார். “நானும்தான் உழுகிறேன்” என்றார்.
“அப்படியா? அப்படியானால் உன் கலப்பை எங்கே? உழவு மாடுகள் எங்கே?” என்று கேட்டான் பரத்வாஜன்.
சந்நியாசி கூறினார், “பூமி முழுவதுமே என்னுடைய வயல்தான். முயற்சிதான் என் உழவு மாடுகள். நல்லெண்ணங்கள் என் விதைகள். உண்மையைக் கொண்டு நான் களையைப் பிடுங்குகிறேன். நல்ல காரியங்கள் என்ற விளைச்சலை அறுவடை செய்கிறேன். அறுவடையான இந்த உணவைக் கொண்டு நான் மனித சமுதாயத்தின் ஆத்மாக்களுக்கு உணவு பரிமாறுகிறேன். அப்பனே! உன்னைப் போல நானும் ஒரு விவசாயிதான்”
இந்த சொற்களைக் கேட்ட பரத்வாஜன், அந்த சந்நியாசி கௌதம புத்தர் என்பதை உணர்ந்தான்.