ஒருநாள் கபீர்தாசர் வீட்டிற்கு பக்தர் ஒருவர் வந்தார். அவர் கபீர்தாசர் வீட்டிலேயே அமைதியாக அமர்ந்திருந்தார்.
அவரைக் கண்ட கபீர்தாசர், “உங்களுக்கு என்ன வேண்டும்? இப்படி இங்கு வந்து அமர்ந்து கொண்டு அமைதியாக இருக்கிறீர்களே?” என்று கேட்டார்.
அவர் பதில் சொல்லத் தயங்கினார்.
கபீர் அவரைக் கவனித்து விட்டு, “தங்கள் முகவாட்டத்தைப் பார்க்கும் போது, தங்கள் இல்லற வாழ்க்கை இன்பமில்லாதது போல் தோன்றுகிறது...உண்மையா?” என்று கேட்டார்.
“ஆமாம். என் குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லை. எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. எங்களுக்குள் நிம்மதியில்லை. நான் என்ன சொன்னாலும் அவள் கேட்பதில்லை. அவள் சொன்னாலும் நான் கேட்பதில்லை...”
“சரி இருங்கள்.” என்ற கபீர்தாசர் வீட்டிற்குள் சென்றார். சிறிது நேரத்திற்குப் பின்பு அவருடன் அமைதியாக அமர்ந்து கொண்டார்.
அப்போது கபீர்தாசரின் துணைவியார் இரண்டு டம்ளர்களில் பாலைக் கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தார்.
இரண்டு பேரும் ஆளுக்கொரு டம்ளரை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தனர்.
வந்திருந்தவரின் முகம் சுருங்க ஆரம்பித்தது. அவரால் அந்தப் பாலைக் குடிக்கவே முடியவில்லை. ஆனால், கபீர்தாசர் முகத்தில் எந்த வித்தியாசமுமில்லை.
அந்த அம்மையார் பாலில் சர்க்கரைக்குப் பதில் உப்பைப் போட்டிருந்தார். அந்த அம்மையார் “பாலில் இனிப்பு போதுமா? இல்லை இனியும் சிறிது போடட்டுமா?” என்று கேட்டார்.
கபீர் “இது போதும்!” என்று பதிலளித்தார்.
வந்தவர் கபீரைப் பார்த்து, “என் கேள்விக்குப் பதில் சொல்லவில்லையே?” என்று கேட்டார்.
அதற்கு கபீர்தாசர், “நான் இப்போது என் மனைவிக்கு என்ன பதில் சொன்னேனோ அதுதான் உங்கள் கேள்விக்கும் பதில். எந்தக் குடும்பத்தில் கணவனும் மனைவியும் ஒருவர் குற்றத்தை மற்றொருவர் பார்க்காமல் எளிதாக எடுத்துக் கொள்கிறார்களோ? அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்” என்றார்.
வந்தவருக்குப் புரிந்தது.