மாமன்னர் அக்பர் ஒருமுறை தன் பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தார். நேரமாகி விட்டதால் வழியிலேயே தொழுகையை நடத்தி முடித்துவிடலாம் என முடிவெடுத்தார். அதனால் குதிரையிலிருந்து இறங்கி அருகிலேயே ஒரு இடத்தில் தன் தொழுகையைத் தொடங்கினார்.
சிறிது நேரம் சென்றிருக்கும். திடீரென்று ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டது. அவள் ஏதோ ஒரு பெயரைத் திரும்பத் திரும்பக் கூறொயபடி ஆவேசமாக ஓடிக் கொண்டிருந்தாள். அவள் புலம்புவதிலிருந்து அவள் தன் காணாமல் போன மகனைத் தேடி ஓடுகிறாள் என்று புரிந்தது.
ஓடியவள் மாமன்னர் தொழுகை நடத்துவதைக் கூடக் கவனிக்காமல் அவர் கீழே விரித்திருந்த போர்வையை மிதித்துக் கொண்டு ஓடினாள்.
அக்பருக்குக் கோபம் வந்து விட்டது.
“ஏ! பெண்ணே! நில். உனக்கு என்ன துணிச்சல்? ஒரு மாமன்னன் தொழுகை நடத்துவதைக் கூட கவனிக்காமல் இப்படிப் பேய் பிடித்தவள் போல் ஓடுகிறாயே. உன் சத்தத்தால் எனது தொழுகை தடைப்பட்டது. உன் ஓட்டத்தால் நன் விரித்திருந்த விலையுயர்ந்த எனது போர்வை பாழ்பட்டது. இதற்காக உனக்கு நான் என்ன தண்டனை தரப் போகிறேன் தெரியுமா?” என்று கொதித்தெழுந்தார்.
அவளோ பாவம் நிலைகுலைந்து நின்றாள். அச்சம் படர்ந்தது.
“மன்னா! நான் எனது மகனைக் காணவில்லையே என்ற துயரத்தில் இருந்ததால் எனக்கு என்னைச் சுற்றி நடக்கு எதுவும் தெரியவில்லை. என்னை மன்னித்தருளுங்கள்” என்று மண்டியிட்டு வேண்டினார்.
“அதெல்லாம் முடியாது” என்று மாமன்னர் சத்தமிட்டார்.
அங்கிருந்த தளபதி, “மன்னரே! இவள் மீது குற்றம் இருப்பதாக எனக்குப் படவில்லை. நீங்கள் உங்கள் தொழுகையில் முழு ஈடுபாட்டுடன் ஈடுபட்டிருந்தால் சுற்றி நடப்பது எதுவுமே உங்களுக்குத் தெரிந்திருக்காது...”
“ஆம் தளபதியாரே! நீங்கள் சொல்வதும் உண்மைதான். என் மனதை நான் முழுமையாக அந்த அல்லாவிடம் செலுத்தாமல் அவளைக் குறை கூறுவது எந்தவிதத்திலும் நியாமில்லைதான்” என்று கூறி அந்தப் பெண்ணை அனுப்பி விட்டார் அக்பர்.