சர்க்கஸ் கூடாரத்துக்குத் தன் மனைவியுடன் சென்றான் ஒருவன்.
அங்கு ஒரு பெரிய யானை, தன் குட்டி யானையுடன் வந்தது. குட்டி யானையின் காலில் பெரிய சங்கிலி போடப்பட்டிருந்தது. பெரிய யானையின் காலில் சிறிய சங்கிலி மட்டுமே போடப்பட்டிருந்தது.
இதைக் கண்ட அவன், “இந்த சர்க்கஸிலிருப்பவர்களுக்கு சிறிது கூட பொறுப்பில்லை. குட்டி யானைக்குப் பெரிய சங்கிலியும், பெரிய யானைக்குச் சிறிய சங்கிலியும் போட்டுக் கட்டி வைத்திருக்கிறார்கள் பார், இதை இப்படியே விட்டால் பெரிய ஆபத்தாகிவிடும்” என்று மனைவியிடம் சொன்னான்.
சொன்னவுடன் நிற்கவில்லை. அவன் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு அந்த சர்க்கஸ் முதலாளியைப் போப் பார்த்தான்.
அவரிடம், “அய்யா, உங்கள் சர்க்கசில் இருப்பவர்களுக்குப் பொறுப்பு சிறிதுமில்லை. குட்டி யானையின் காலில் பெரிய சங்கிலியைப் போட்டிருக்கிறார்கள். பெரிய யானையின் காலில் சிறிய சங்கிலியைப் போட்டிருக்கிறார்கள்...” என்றான்.
சர்க்கஸ் முதலாளி சிரித்தபடி, “நீங்கள் நினைப்பது போல் த்வறு ஏதும் நடக்கவில்லை. அவர்கள் சரியாகத்தான் செய்திருக்கிறார்கள்” என்றார்.
அவனுக்கு கோபம் வந்தது. “என்னடா இது, சர்க்கஸில் இருப்பவர்கள் பொறுப்பில்லாமல் செய்த காரியத்தைச் சொன்னால், இவரும் அது சரிதான் என்று சொல்கிறாரே...” என்று எண்ணினான்.
சர்க்கஸ் முதலாளி, “தம்பி, நீங்கள் இன்னும் வாழ்க்கையின் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். அதனால்தான் இவ்வளவு பதற்றமடைகிறீர்கள்.” என்றார்.
அவனுக்கு எதுவும் புரியாமல் அவரையேப் பார்த்தான்.
அவர், “தம்பி, யானை குட்டியாக இருக்கும் போது பெரிய சங்கிலியால் கட்டிப் போடுவோம். அது சும்மா இருக்குமா? சங்கிலியை இழுத்து இழுத்துப் பார்க்கும். அறுக்க முடியாது. இது பல நாட்கள், பல நேரம் என்று பலமுறை நடக்கும். கடைசியில் அது சங்கிலியை நம்மால் அறுக்க முடியாது என்கிற நிலைக்குத் தானாகவே வந்துவிடும். யானையும் வளர்ந்து பெரிதாகி விடும். அதனுடைய அறுக்கும் முயற்சியும் அறுந்து போய்விடும். அந்த நிலையில் சங்கிலியை மாற்றிச் சிறிய சங்கிலியாகப் போட்டு விடுவோம்.” என்றார்.
அவர் தொடர்ந்து, “யானைக்கு இப்போது தன் காலில் மாட்டியிருக்கும் சங்கில் மட்டுமே தெரியும். அது சிறியதா? பெரியதா? என்று பார்ப்பதுமில்லை... அதை அறுத்துக் கொண்டு ஓடிவிட வேண்டும் என்கிற எண்ணமும் ஏற்படுவதில்லை” என்றார்.
சர்க்கஸ் முதலாளி சொன்னது அவனுக்கு இப்போது புரிந்தது...!