எண்பது வயதிலும் உழைத்துக் கொண்டிருந்த அந்த வயோதிகரை அனைவரும் பார்த்து ஏளனம் செய்து கொண்டிருந்தனர்.
அவர் மாங்கன்று ஒன்றை நடவு செய்து கொண்டிருந்தார்.
அதைப் பார்த்த பலரும், “இன்றோ அல்லது நாளையோ சாகப் போகிற கிழவனின் ஆசையைப் பாருங்கள். மாங்கன்று நட்டுக் கொண்டிருக்கிறார். பழம் கிடைக்கும் வரை இந்தக் கிழம் உயிருடன் இருக்குமா?” என்று அவர் காதுபடவே பேசினர்.
ஆனல் அந்தக் கிழவர் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவரது பணியைச் செய்து கொண்டிருந்தார்.
மக்களின் ஏளனப் பேச்சையும், கிழவர் மரக்கன்று நடுவதில் ஆர்வம் காட்டியதையும் அவ்வழியே வந்த மாமன்னர் பாபர் கவனித்தார்.
அவர் குதிரையை விட்டுக் கீழிறங்கி அந்தப் பெரியவரிடம் சென்றார்.
“பெரியவரே! இந்தக் கடும் வெயிலில், தள்ளாத வயதில் இப்படி உழைத்துக் கொண்டிருக்கிறீர்களே...? இதன் பலன் உங்களுக்குக் கிடைக்குமா?” என்றார்.
“மன்னா! எனது முன்னோர்கள் அவர்களது உழைப்பின் பயனை விட்டுச் சென்றதால்தான் நான் அதைப் பயன்படுத்திச் சிறப்பாக இருக்கிறேன். அதைப் போல் எனக்குப் பின்னால் வரும் தலைமுறைக்கு நானும் ஏதாவது செய்ய வேண்டாமா?” என்றார் அந்தப் பெரியவர்.
அந்தப் பெரியவரின் பேச்சு மன்னனின் மனதைத் தொட்டது.
உடனே அவன் பணமுடிப்பு ஒன்றை அந்தப் பெரியவருக்குப் பரிசாக அளித்தான்.
மகிழ்ச்சியடைந்த பெரியவர், “மன்னா, பார்த்தீர்களா! மரம் வளர்ந்து, பூ பூத்துக் காய் காய்த்து அதன் பிறகுதான் அதை வைத்தவருக்குப் பலன் கிடைக்கும். ஆனால் எனக்குப் பாருங்கள்... இன்று இந்தக் கன்றை நட்டவுடனே கைமேல் பலன் கிடைத்து விட்டது” என்றார்.
மீண்டும் மகிழ்ச்சியடைந்த மன்னர், கிழவரின் பேச்சுத் திறனைப் பாராட்டியபடி, இன்னொரு பணமுடிப்பைக் கொடுத்து, “இதையும் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
இரண்டாவது பணமுடிப்பைப் பெற்ற அந்தக் கிழவர், “மன்னா! மரம் வளர்த்தால் அது வருடத்திற்கு ஒரு முறைதான் பலனளிக்கும். எனக்குப் பாருங்கள். இந்தக் கன்றை நட்டவுடன் இரண்டு முறை பலன் கிடைத்து விட்டது” என்றபடி தன் பொக்கை வாயால் சிரித்தார்.
அந்தக் கபடமில்லாத சிரிப்பில் மயங்கிய மன்னர் மீண்டும் ஒரு பணமுடிப்பை அவரிடம் எடுத்துக் கொடுத்தார்.
உடனே அந்தக் கிழவர், “நம்மில் பலரும் அதைச் செய்தால் என்ன கிடைக்கும், இதைச் செய்தால் என்ன கிடைக்கும் என்று எதையாவது எதிர்பார்த்துத்தான் எதையும் செய்கின்றனர். எதிலும் கணக்குப் பார்த்துச் சுயநலத்துடன் செயல்படுவது சரியாகத் தெரியவில்லை...” என்றார்.
மன்னரும், “உண்மைதான்! உங்களைப் போன்றவர்களின் உழைப்பை அடுத்த தலைமுறையினரும் அனுபவிப்பார்கள்! உண்மையான உழைப்பின் பயன் அடுத்து வரும் தலைமுறைக்கும் கிடைக்கும்” என்று அவரைப் பாராட்டிச் சென்றார்.
அப்போதுதான் அங்கிருந்த மக்களுக்கு அந்தப் பெரியவரின் உழைப்பை ஏளனம் செய்தது எவ்வளவு பெரிய தவறு? என்று தெரிந்தது.