ஒரு தொடருந்துப் பெட்டியில் ஒரு தாயும், அவளது பதினைந்து வயது மகளும் அமர்ந்திருந்தனர்.
அவர்கள் எதிரே ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.
தொடருந்து புறப்பட்டவுடன் அந்தப் பெண் தன் தாயிடம், “அம்மா, இது என்ன மரம்?” என்று கேட்டாள்.
அந்தத் தாய், “இது வேப்பமரம்” என்று பதிலளித்தாள்.
அந்தப் பெண் சந்தோசமடைந்தாள்.
அடுத்து வழியில் தெரியும் மரம், விலங்கு என ஒவ்வொன்றாய்க் கேட்டுக் கொண்டே வந்தாள்.
அவளது தாயும் அவள் கேட்ட ஒவ்வொன்றுக்கும் பதிலைச் சொல்லிக் கொண்டே வந்தாள்.
எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த பெண், “பாவம், மனநிலை பாதிக்கப்பட்ட பெண் போலிருக்கிறது” என்று நினைத்துக் கொண்டாள்.
சிறிது நேரத்திற்குப் பின் அந்தப் பெண், அந்தத் தாயிடம், “பெண்ணுக்கு ரொம்ப நாளா இப்படி இருக்கிறதா?” என்று கேட்டாள்.
அதற்கு அந்தத் தாய், “எதைக் கேட்கிறீர்கள்?” என்று கேட்டாள்.
அவள், “இல்லை, இந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டவள் போல் இருக்கிறாளே, அதனால் கேட்டேன்” என்றாள்.
அதற்கு அந்தத் தாய், “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இந்தப் பெண்ணுக்குப் பிறவியிலிருந்து கண் பார்வை தெரியாமல் இருந்தது. சென்ற வாரம்தான் அறுவை சிகிச்சை செய்து, தற்போது கண்பார்வை வந்துள்ளது. அதனால் அவளுக்குப் பார்ப்பது எல்லாம் புதுமையாக இருக்கிறது” என்றாள்.
கேள்வி கேட்ட பெண்ணுக்கு என்னவோ போலாகிவிட்டது.
நாம் எதையும் உண்மையை ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்.நாமாக ஒன்றை நினைத்துக் கொண்டு எதையும் இனி தவறாகப் பார்க்கக் கூடாது என்று அவள் முடிவெடுத்துக் கொண்டாள்.