மேட்டர்லிங் என்பவர் ஒரு புகழ்பெற்ற பெல்ஜியம் எழுத்தாளர்.
அவர் எழுதிக் கொண்டிருக்கும் போது அவருக்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாது. அப்படி யாராவது ஏதாவது செய்து விட்டால் அவருக்குக் கடுமையான கோபம் ஏற்படும்.
ஒரு நாள் அவருடைய மனைவி கடைக்குச் சென்று திரும்பினாள்.
வீட்டின் கதவு திறந்து கிடந்தது.உள் அறைகள் அனைத்தும் திறந்து கிடந்தன. பொருள்கள் எல்லாம் சிதறிக் கிடந்தன. அங்கு திருடன் வந்து போனதற்கான அறுகுறிகள் அனைத்தும் தென்பட்டன.
அவள் வேகமாக வீட்டிலிருந்த அலமாரியைப் போய்ப் பார்த்தாள். அது உடைக்கப்பட்டு இருந்தது. அதிலிருந்த நகைப்பெட்டியில் வைத்திருந்த அனைத்து நகைகளும் திருட்டு போயிருந்தது.
இதனால் கோபமடைந்த அவள் அங்கு நடந்தது எதுவும் தெரியாமல் எழுதிக் கொண்டிருந்த கணவனை நோக்கிச் சென்று சத்தம் போட்டாள்.
தனது நகைகள் எல்லாம் திருட்டு போய்விட்டன. இது கூடத் தெரியாமல் எழுதிக் கொண்டிருக்கிறீர்களே? என்று கூச்சலிட்டாள்.
எழுத்தாளருக்குக் கோபம் வந்துவிட்டது.
“உனக்கு அறிவு எதுவும் இருக்கிறதா? இல்லையா? நான் எழுதிக் கொண்டிருக்கும் போது எந்தக் குறுக்கீடுகளும் இருக்கக் கூடாது என்று உனக்குத் தெரியாதா? நம் வீட்டில் திருடிச் சென்ற திருடனுக்குக் கூட,நான் எழுதும் போது எந்தக் குறுக்கீடும் செய்யக் கூடாது என்று தெரிந்திருக்கிறது. உனக்கு எதுவும் தெரியவில்லை. இப்படி கூச்சல் போடுகிறாயே?” என்றார் அவர்.