இறைவன் கிருஷ்ணனுக்கு ஒருநாள் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது.அன்று ருக்குமணிக்குப் பிறந்த நாள். சத்யபாமாவிற்குத் திருமண நாள்.
கிருஷ்ணருக்கு எங்கு முதலில் செல்வது என்று குழப்பம்.
முதலில் ருக்குமணியைச் சென்று சந்தித்தார். அங்கு விருந்து உண்டார்.
அதன் பிறகு, சத்யபாமாவின் இல்லத்துக்குச் சென்றார்.
முதலில் தன் வீட்டுக்கு வராமல் ருக்குமணியின் வீட்டுக்குப் போய்விட்டாரே என்று சத்யபாமாவிற்குக் கடுங்கோபம்.அவள் பேசாமல் இருந்தாள்.
அவளின் கோபம் கண்ட கிருஷ்ணர், அங்கிருந்த தோட்டத்துக்குச் சென்றார்.
அங்கிருந்த பழங்களைப் பறித்துச் சாப்பிட்டார்.
“பாமா, இந்தப் பழங்கள் நல்ல சுவையாக இருக்கின்றன. இதற்கு செடி, கொடிகளிடம் நீ காட்டிய அன்புதான் காரணமாக இருக்கும். இந்தப் பழங்களைப் போன்றே உன் மனதிலும் இனிமை இருக்கிறது. அதை நான் பாராட்டுகிறேன்” என்றார்.
சத்யபாமா மனம் குளிர்ந்து போனாள்.
அவளுக்கு கிருஷ்ணர், ருக்குமணி மீதிருந்த கோபமெல்லாம் காணாமல் போயின. கிருஷ்ணர் தன் மேல் எவ்வளவு பிரியமாக இருக்கிறார் என்று பெருமைப்பட்டுக் கொண்டாள்.
இறைவன் நம் எல்லோரையும் ஒரே மாதிரியாகத்தான் நடத்துகிறார். நாம்தான் அவர் ஒருவனைப் பணக்காரராக வைத்திருக்கிறார். ஒருவனை ஏழையாக வைத்திருக்கிறார் என்று பாகுபாடாய்ப் பார்க்கிறோம். நடப்பு வாழ்க்கைக்கு நம்முடைய முன் வினைகள்தான் காரணம். இதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதில்லை. நமக்குரியதும், நமக்கேற்றதும் எதுவென்று தெரிந்து அவர் நமக்கு உதவிக் கொண்டுதானிருக்கிறார் என்கிற நம்பிக்கை நமக்குள் இருக்க வேண்டும்.