முந்தைய காலத்தில் இரு சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களில் ஒருவன் பெரிய பணக்காரன். அடுத்தவனோ பரம ஏழை.
ஒரு நாள் இரவு நேரம்.
ஏழைச் சகோதரன் வயல் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது யாரோ தன் மூத்த சகோதரனின் வயலுக்குத் தானியக் கட்டுகளைக் கொண்டு போவதைப் பார்த்தான்.
“நீ யார்?” என்று அந்த ஏழை கேட்டான்.
“நான்தான் உன் சகோதரனின் அதிர்ஷ்டம்”
“என் அதிர்ஷ்டம்?”
“வறுமைதான் உன் விதி!”
இதைக் கேட்ட ஏழை, தன் விதியிடமிருந்து எப்படியாவது தப்பி ஓடி விட வேண்டுமென்று முடிவு செய்தான். தன் மனைவி மக்களையும், தட்டுமுட்டுச் சாமான்களையும் வண்டியிலேற்றிக் கொண்டு கிளம்பினான்.
அவன் கைகள் குளிரால் சில்லிட்டுப் போயின. அப்போதுதான் தன் கையுறைகளை மறந்து வந்து விட்டது தெரிந்தது.
உடனே தன் குடிசைக்குள் ஓடினான்.
யாரோ வருத்தத்துடன் முனகிக் கொண்டிருந்த சத்தம் கேட்டது.
”யாரது” என்று அந்த ஏழை கேட்டான்.
“நான்தான் உனக்குச் சொந்தமான வறுமை. என்னைக் கைவிட்டு விடாதே! அப்படி நீ செய்தாலும் நான் எப்படியும் உன்னை பிடித்துக் கொள்வேன்” என்றது.
“என் வண்டியில் இடமில்லை.நீ என்னுடன் வர விரும்பினால், இந்தக் கண்ணாடிக் குப்பிக்குள் புகுந்து கொள். உன்னை என்னுடன் கொண்டு செல்கிறேன்” என்று கீழே கிடந்த காலிபாட்டிலைக் காட்டினான்.
அவன் சொன்னபடியே வறுமை அந்தக் குப்பிக்குள் நுழைந்து கொண்டது. அவன் அந்தக் கண்ணாடிக் குப்பியை மூடி, அருகிலிருந்த காட்டுக்குள் கொண்டு போய் புதைத்தான். பின்னர் வீட்டுக்குத் திரும்பி வந்தான்.
அதன் பிறகு அவனுடைய நிலைமையே மாறி விட்டது. அவனுக்கு வசதி வந்து விட்டது.
ஒரு நாள் அவன் தன் அண்ணனை விருந்துக்கு வரும்படி அழைத்தான்.
பணக்காரச் சகோதரன் வந்து, வயிறு நிறையச் சாப்பிட்டான். இவ்வளவு பணம் தம்பிக்கு எப்படி வந்தது என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டான்.
தன்னைப் பிடித்திருந்த வறுமையைக் கண்ணாடிக் குப்பிக்குள் அடைத்துக் காட்டுக்குள் புதைத்து விட்ட கதையைக் கூறினான்ம் அவன்.
அதைக் கேட்ட அண்ணனுக்கு தம்பியின் வசதி குறித்து பொறாமை எண்ணம் ஏற்பட்டது.
காட்டுக்குள் சென்று அந்தக் கண்ணாடிக் குப்பியை எடுத்து, அதிலிருந்து வறுமையை விடுவித்து விட்டால் அது தன் தம்பியை மீண்டும் வந்து பிடித்துக் கொள்ளும் என்று நினைத்துக் கொண்டான்.
காட்டுக்குள் சென்று அந்தக் கண்ணாடிக் குப்பியைத் தேடிக் கண்டுபிடித்தான். அதிலிருந்த வறுமையை விடுவித்தான்.
“என் தம்பி என்னை விடப் பணக்காரன் ஆனது எனக்குப் பிடிக்கவில்லை. மறுபடியும் நீ அவனிடம் போய் அவனை முன்போலவே ஏழையாக்கி விட வேண்டும். அதற்காகத்தான் உன்னை விடுவித்தேன்” என்றான்.
கண்ணாடிக் குப்பியிலிருந்து வெளியேறிய வறுமை அவன் சொன்ன எதையும் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.
அது அவன் மேல்சட்டையைப் பிடித்துக் கொண்டு, “உன் சகோதரன் பொல்லாத ஆசாமி! அவன் என்னைக் குப்பிக்குள் அடைத்து இங்குப் புதைத்து வைத்து விட்டான். ஆறு ஆண்டுகளாகப் பூமிக்குள் புதைந்து கிடந்த என்னை விடுவித்த உன்னை எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. இனி நான் உன்னுடன்தான் இருக்கப் போகிறேன்” என்றபடி அவனுடன் ஒட்டிக் கொண்டது.
அண்ணன் அதனிடமிருந்து விடுபட எவ்வளவு முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை. அவன் தன் செல்வத்தையெல்லாம் இழந்து ஏழையானான்.