உண்மையாக இருந்தால்...!
குமரிலபட்டர் என்பவர் ஆதிசங்கரரின் சீடர். பவுத்த சமயத் தத்துவங்களையும் நன்கு அறிந்து கொண்டால், அவற்றைக் கொண்டு வாதங்களில் எளிதாக அவர்களை வென்று விடலாம் என்று எண்ணினார்.
அவர் பவுத்த துறவி போல் வேடமிட்டு புத்த விகாரத்துக்குச் சென்றார்.
அங்கு , பல பவுத்த சமயத் தத்துவங்களை அறிந்து கொண்டிருந்தார்.
ஒருநாள், அவருடைய வேடத்தை அறிந்து கொண்ட சில பவுத்தர்கள் அவரை ஏழாவது மாடிக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து தள்ளி விட்டனர்.
”வேதம் உண்மையாக இருந்தால் எனக்கு ஒரு துன்பமும் நேரக்கூடாது!” என்றபடி குமரிலபட்டர் கீழே விழுந்தார்.
கீழே விழுந்த அவருக்குப் பெரும் துன்பம் எதுவும் நிகழவில்லை. ஆனால், அவரது ஒரு கண்ணில் மட்டும் கல் ஒன்று குத்திக் காயமேற்பட்டது.
காயத்தைக் கண்ட அவர், “எனக்கு ஏன் இந்த துன்பம் ஏற்பட்டது?” என்று கோபமாகச் சத்தம் போட்டார்.
அப்போது அசரீரி ஒலித்தது.
அந்த அசரீரி, “நீ கீழே விழும் போது, வேதம் உண்மையாக இருந்தால்... என்று கூறினாய். அதில் உன்னிடம் ஏற்பட்ட சந்தேகத்தின் பலனாகத்தான் உன் கண்ணில் காயம் ஏற்பட்டது” என்றது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.