இராமன் இலங்கை செல்வதற்காக கடலில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
கரடிகளின் தலைவனான ஜாம்பவான் ராமனிடம், “சுவாமி! பாலப்பணிகள் முடிவடைந்து விட்டன. ஆனால், பாலத்தின் அகலம் குறைவாக இருப்பதால், படையினர் மொத்தமாக பாலத்தில் நடக்க இயலாது. ஒருவர் பின் ஒருவராக வரிசையில்தான் செல்ல முடியும்” என்றார்.
இராமன் ஜாம்பவானையும் அழைத்துக் கொண்டு பாலத்தின் மீது நடக்கத் தொடங்கினார்.
இராமன் பாலத்தில் நடப்பதை அறிந்த கடலில் வாழும் மீன்கள், சுறா, முதலை போன்ற அனைத்துக் கடல் உயிரினங்களும் பாலத்தின் ஓரமாக வந்து இராம தரிசனம் செய்தன.இதனால் பாலத்தின் இருபுறமும் கடல் வாழ் உயிரினங்கள் நெருக்கமாக நின்று கொண்டிருந்தன. இதனால் பாலம் அகலமானதைப் போல் தோன்றின.
இராமன் ஜாம்பவானிடம், “தற்போது, இந்தப் பாலத்தின் இருபுறமும் கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தும் வந்து நின்று கொண்டிருக்கின்றன. இவற்றின் மேலும் நம் படையினர் செல்லலாம்” என்றார்.
இராமனின் சிறப்பை அறியாத ஜாம்பவான் சிரித்தார்.
“இராமா! அதெப்படி முடியும். இந்த உயிரினங்களின் மேல் படையினர் கால் வைத்தால் அந்த எடை தாங்காமல் படையினர் கடலுக்குள் விழுந்து விடுவார்களே” என்றார்.
இராமன், “படை வீரர்களை வந்து நடக்கச் சொல்லுங்கள்” என்றார்.
ஜாம்பவானும் படையினரை அழைத்து வர, அவர்கள் இராம நாமத்தை உச்சரித்தபடி பக்தியுடனும், நம்பிக்கையுடனும் நடந்தனர்.
கடல் வாழ் உயிரினங்களோ தங்கள் மீது படையினர் நடந்து சென்றதால் ஏற்பட்ட வலியைப் பொறுத்துக் கொண்டு, இராமசேவைக்கு தாங்களும் உதவியதாக எண்ணி பெருமையுடன் மகிழ்ச்சி கொண்டனர்.
இறைவனை அடைய விரும்புபவர்கள் எத்தகைய சோதனைகள் தங்கள் முதுகில் ஏற்றப்பட்டாலும், அதைத் தாங்கிக் கொள்வார்கள் என்பதை இதன் வழியாக உணர முடிகிறது.