முன்பொரு காலத்தில் ஒரு கிராமத்தில் பத்மலோசனன் என்கிற இளைஞன் ஒருவன் இருந்தான். அந்தக் கிராமத்தினர் அவனை “பொடோ” என்று விளையாட்டுப் பெயரிட்டு அழைத்து வந்தனர்.
அந்தக் கிராமத்தில் பழையதான கோயில் ஒன்று இருந்தது.
அந்தக் கோயிலுக்குள் பூசை செய்வதற்கான சிலைகள் எதுவுமில்லை. கோயில் வளாகம் முழுவதும் புல், பூண்டுகள் முளைத்துக் கிடந்தன. வவ்வால் மற்றும் சில பறவைகளுக்குப் புகலிடமாகவும் அது இருந்து வந்தது.
ஒருநாள் மாலை, அந்தக் கோயிலிலிருந்து பூசை மணியடிக்கும் சத்தம் வந்தது.
இதைக் கேட்ட மக்கள் அந்தக் கோயிலில் புதிதாக யாரோ ஒரு பக்தர் சிலை வைத்துப் பூசை செய்வதாக எண்ணியபடி அந்தக் கோயிலின் முன்பாகக் கூடினர்.
அவர்கள் கோயில் வாசலில் கைகளைக் குவித்து வணங்கியபடி ஆராதனைச் சப்தத்தைக் கேட்டுக்கொண்டு மூர்த்தியைத் தரிசிக்க ஆவலுடன் நின்றனர்.
அப்படி அங்கு நின்றவர்களில் ஒருவன் ஆர்வம் மேலிட, கதவுகளின் இடுக்கு வழியாக உள்ளே பார்த்தான்.
அங்கே மணியடித்து, சங்கநாதம் செய்தவன் “பொடோ” என்பதைத் தெரிந்து கொண்டான். அவன் உள்ளே நன்றாகப் பார்த்தான். கோயிலிலுள்ள தரை பழைய நிலையிலேயே இருந்தது. கோயில் கருவறையில் சிலை எதுவுமில்லை.
“கோயிலுக்குள் இருப்பவன் பொடோ . அவன் கோயிலைச் சுத்தம் செய்யவில்லை. அங்கு பதினொரு வவ்வால்கள் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. அவன்தான் மணியடித்து ஆரவாரம் செய்து கொண்டிருக்கிறான்” என்றான்.
கோயிலைச் சுத்தம் செய்யாமல், சிலை என்று எதுவுமில்லாமல் இவன் வீணாக சப்தம் செய்து கொண்டிருக்கிறான் என்று தெரிந்ததும் ஊர்மக்கள் அவனைத் திட்டியபடி அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுபோல், உள்ளமெனும் கோயிலில் ஈசுவரனுடைய உருவத்தை வைத்திட விரும்பினால், வெறுமனே வாயில் சொல்வதில் பயனேதுமில்லை.
முதலில் உன் உள்ளத்தைத் தூய்மையாக்கிக் கொள். அது தூய்மையடைந்தால் ஈசுவரன் தானே அங்கு வந்து வசிப்பான். அசுத்தமான இடத்தில் ஈசுவரனை வைத்திட முடியாது. மேல் சொன்ன வவ்வால்கள் பதினொரு இந்திரியங்களைக் குறிக்கின்றன. அதாவது, ஞானேந்திரியன் ஐந்து, கர்மேந்திரியம் ஐந்து, மனம் ஒன்று என மொத்தம் பதினொரு இந்திரியங்களைக் கடந்தால் மட்டுமே கடவுளை உள்ளத்தில் குடி வைக்க முடியும்.