வணிகர் ஒருவனிடம் குதிரை ஒன்றும், கழுதை ஒன்றும் இருந்தன.
அவர் தன் பயணத்திற்காகக் குதிரையையும், சுமைகளைக் கொண்டு செல்ல கழுதையையும் பயன்படுத்தி வந்தார்.
அவர் குதிரைக்கு நல்ல வகை உணவு, அலங்கார சேணம், கழுத்துக்கு வெள்ளிப்பட்டை என அழகுபடுத்தியிருந்தார். குதிரையைத் தினமும் இளம் சுடுநீரில் குளிப்பாட்டி வாசனைத் திரவியங்கள் பூசிவிடுவார்.குதிரைக்குக் கொள்ளு மற்றும் சிறப்பு உணவுகள் வழங்கப்படும். குதிரைக்கென்று தனி லாயம் அமைக்கப்பட்டு அதில் இருக்கும். இதனால் குதிரை தன்னைப் பற்றிப் பெருமையாக நினைத்துக் கொண்டது.
ஆனால் அவர் கழுதையையோ வெட்டவெளியில் நிறுத்தி வைத்திருப்பார். சாதாரண உணவு மட்டுமே கொடுக்கப்படும். வாரத்தில் ஒருநாள் மட்டும் ஆற்றில் குளிப்பாட்டி வருவார். கழுதை அமைதியாகத் இருக்கும்.
சில சமயம் குதிரை கழுதையைப் பார்த்து, “நம் முதலாளி என்னை எப்படிக் கவனித்துக் கொள்கிறார்.நான் அவர் ஒருவரை மட்டுமே சுமந்தாலும் எனக்கு எவ்வளவு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவருடைய பல சுமைகளை நீ சுமந்தாலும், உன்னை அவர் கண்டு கொள்வதே இல்லை...! எல்லாம் என் மதிப்பு அறிந்துதான்...” என்று பெருமையாகப் பேசும்.
ஒருநாள் முதலாளியைச் சுமந்து சென்ற குதிரை பள்ளம் ஒன்றைத் தாண்டும் போது, அதனுள்ளே தவறி விழுந்து விட்டது.
குதிரை சுமந்து சென்ற முதலாளிக்குப் படுகாயம் ஏற்பட்டது.
கோபத்துடன் எழுந்த முதலாளி, குதிரையின் ஒரு கால் உடைந்து விட்ட போதிலும், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், அங்கிருந்த கம்பு ஒன்றை எடுத்து குதிரையை கோபம் தீரும் வரை அடித்தான்.
பின்னர் வீட்டுக்குக் குதிரையுடன் திரும்பினான்.
குதிரை நொண்டிக் கொண்டு வருவதைப் பார்த்த கழுதை அதனிடம் என்னவென்று விசாரித்தது.
குதிரை நடந்ததைச் சொல்லி வருத்தப்பட்டது.
பின்னர் கழுதையிடம், “நான் உன்னைப் பார்த்து எத்தனையோ நாள் ஏளனமாகச் சிரித்திருக்கிறேன். இன்றுதான் நான் உண்மையை உணர்ந்தேன்” என்றது.