அரசன் ஒருவன் இரவு நேரத்தில் மாறு வேடத்தில் நகரச் சோதனைக்காகச் எச்ன்று கொண்டிருந்தான். அரசனைத் தொடர்ந்து அவனது மெய்க்காப்பாளர்கள் சிறிது தொலைவில் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள்.
ஒரு தெருவின் வழியாக அரசன் சென்ற போது அங்கிருந்த நாய் ஒன்று அந்த அரசனைக் கடித்து விட்டது. நாயால் கடிபட்ட அரசன் கத்த அவனைப் பின் தொடர்ந்து வந்த மெய்க்காப்பாளர்கள் அரசனைக் காப்பாற்ற வேகமாக ஓடி வந்தனர். அதற்குள் நாயின் குரைப்புச் சத்தத்தைக் கேட்ட நாயின் சொந்தக்காரனும் வீட்டைத் திறந்து வெளியே வந்தான்.
தன் நாயைப் பிடித்துக் கட்டிப் போட்ட அவன் கடிபட்டவன் அரசன் என்பதை அறிந்து பயந்து போனான். அவன் கை கால்களெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தன.
அரசனின் மெய்க்காப்பாளர்கள் கட்டிப் போட்டிருந்த நாயைக் கொல்வதற்காகச் சென்றனர். அரசன் அவர்களைத் தடுத்து " அந்த நாயை நீங்கள் கொல்ல வேண்டாம். அவனே அந்த நாயைக் கொல்லட்டும். அதன் பின்பு அதே போல் அவ்னை நீங்கள் கொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டான்.
மறுநாள், நாயின் சொந்தக்காரன் நாயைக் கொன்று விட்டான். அரண்மனைக்குச் சென்ற நாயைத் தான் கொன்று விட்டதாகத் தெரிவித்தான்.
அரசனும் அவனிடம், " நாயை எப்படிக் கொன்றாய்? " என்று கேட்டான்.
"அரசே, நான் நாயின் வாலைப் பிடித்து ஒரு வீச்சிலே பாறையில் அடித்துக் கொன்று விட்டேன்." என்றான்.
நாயைப் போல் அவனை எப்படிக் கொல்வது? அவனுக்குத்தான் வால் இல்லையே... என்பதால் அவனை விடுவித்ததுடன் அவனுடைய அறிவுக் கூர்மையைப் பாராட்டிப் பரிசும் வழங்கி அனுப்பினான் அரசன்.