கொடுங்கோல் மன்னனை விட...!
சீன ஞானி கன்பூசியஸ் ஒரு நாள் தனது சீடர்களுடன் மலைப்பக்கம், காட்டு வழியே சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது.
அழுகுரல் கேட்ட பக்கம் பார்த்தார். அங்கு ஒரு சமாதிக்கு அருகில் பெண்ணொருத்தி துக்கம் தாளாமல் அழுது கொண்டிருந்தாள்.
தன் சீடனை அனுப்பி விசாரிக்கச் சொன்னார் ஞானி.
“பெரியவரே! நான் என்ன சொல்வேன்? முதலில் என் கணவரின் தகப்பனாரை இங்கே ஒரு புலி அடித்துக் கொன்றது. அதே புலி பிறகு என் கணவரையும் கொன்றது. ஆனால், இப்போதோ என் மகளையும் அந்தப் புலி அடித்துக் கொன்று விட்டது.” என்றாள் அவள்.
“அப்படியானால் இந்தக் காட்டைவிட்டு நாட்டுக்குள் சென்று வாழ்வதுதானே!” என்று கேட்டான் சீடன்.
“நாடா, நாட்டில் கொடுங்கோலாட்சி நடக்கிறதே... அங்கு எப்படிப் போவேன்” என்றாள் அந்தப் பெண்.
இதைக் கேட்ட கன்பூசியஸ் சொன்னார்:
“சீடர்களே! இது நினைவிருக்கட்டும். கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டிற்குக் கடும்புலி வாழும் காடு மேலானது”
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.