ஒரு முனிவர் நீண்ட காலம் தவம் செய்து வந்தார்.
அவருடைய தவத்தில் மகிழ்ச்சியடைந்த கடவுள் அவரின் முன்பாகத் தோன்றினார். “பக்தா! உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?” என்று கேட்டார்.
“எனக்கு மரணமில்லாப் பெருவாழ்வு அளிக்க வேண்டும்” என்றார்.
“மானிட உடல் எடுத்த பின்பு இளமை, முதுமை அதன் பின்பு மரணம் என்பதுதான் பொது நியதி! எனவே மரணம் தவிர்க்க முடியாதது. அதைத் தவிர்த்து, வேறு ஏதாவது கேள்!” என்று கேட்டார் கடவுள்.
முனிவர் தன்னுடைய மரணத்தைத் தவிர்த்து இவ்வுலக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணி கடவுளிடம் தந்திரமாக, “நான் சாகும் நிலையில் எனது உயிர் வேறொரு உயிரினத்தின் உடலில் நுழைய அனுமதிக்க வேண்டும். அதாவது, கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை போல் வேறொரு உயிரினத்தின் உடலுக்குள் புகுந்து கொள்ள வேண்டும்” என்று வரத்தைக் கேட்டார்.
கடவுளுக்கு முனிவரின் உள் நோக்கம் புரிந்து விட்டது. அவர் முனிவருக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டுமென்று நினைத்தார்.
“அப்படியா! ஆகட்டும்” என்று வரமளித்து விட்டு மறைந்தார்.
முனிவருக்கு வயோதிகம் ஏற்பட்டது. மரணம் வந்து விடும் என்று பயம் வந்தது. மரணபயத்தில் குளக்கரைப் பக்கமாகச் சென்றார்.
அங்கு ஒரு தவளை தரைக்கும் தண்ணீருக்குமாக மாறி மாறித் தாவிக் கொண்டிருந்தது.
முனிவருக்கு அந்தத் தவளையின் உடலுக்குள் புகுந்து விட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. உடனே அவர் உயிர் தவளையின் உடலுக்குள் சென்று விட்டது.
தவளையின் உடலுக்குள் நுழைந்த அவருக்குத் தவளை போன்று கத்த வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. தவளையைப் போல் கத்தத் தொடங்கினார்.
தவளைச் சத்தத்தைக் கேட்ட அங்கிருந்த கரு நாகம் ஒன்று தவளையைப் பாய்ந்து பிடித்து விழுங்கியது.
பாம்பின் வயிற்றுக்குள் சென்ற தவளையின் உடல் செரிமானமாகும் நிலையில் தவளையின் உடலிலிருந்து கருநாகத்தின் உடலுக்குள் புகுந்தார் அந்த முனிவர்.
அந்தப் பாம்பு வயல்வெளிக்குள் சென்றது. அந்த நேரம் வயல்காட்டில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி அதைப் பார்த்து விட்டான். அவன் அங்கிருந்த பெரிய கட்டையை எடுத்து பாம்பைத் தாக்கினான்.
பாம்பின் தலை நசுங்கியது. அதன் பின்னர் அந்தப் பாம்பின் உடலில் இருக்க முடியாத நிலையில் முனிவர் அந்த விவசாயியின் உடலில் நுழைந்தார்.
விவசாயிக்கும் வயோதிகமாகி விட்டது. அதைக் கண்டு பயந்து போன முனிவர் விவசாயியின் வீட்டிலிருந்த ஒரு ஆட்டின் உடலுக்குள் சென்றார்.
விவசாயி அந்த ஆட்டை அவனது குலதெய்வத்துக்குப் பலி கொடுப்பதற்காகவே வளர்த்து வந்தான். எனவே அவன் அதைக் கோயிலில் பலியிட்டான்.
அந்த முனிவர் சோர்ந்து போனார். அவரது சொந்த உடலுக்குள்ளேயே போய் விடலாமென்று முடிவு செய்தார்.
அவருடைய உடல் இருந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தார். அந்த உடலைப் புதைத்து அழுகி வெறும் எலும்புக் கூடாக இருந்தது. எலும்புக் கூடாக இருந்த அந்த உடலுக்குள் போக முடியவில்லை.
அவர் மனம் வருந்தினார், “கடவுளிடம் சாகாவரம் பெற்ற நான் நோகாவரம் கேட்கத் தவறி விட்டோமே..” என்று நினைத்தபடி கடவுளை அழைத்தார்.
கடவுள் அவர் முன் தோன்றினார்.
கடவுள் முனிவரிடம், “பக்தனே, என்னை அழைத்தது ஏன்?” என்று கேட்டார்.
முனிவர், “கடவுளே எனக்கு நீண்ட நாட்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து சலிப்பு ஏற்பட்டு விட்டது. எனவே அனைத்து மனிதர்களுக்கும் அளிக்கும் மரணத்தை எனக்கும் அளித்து உதவுங்கள்” என்றார்.
கடவுள் அவரிடம், “முனிவரே! நீ சாகாவரம் பெற விரும்பியதில் தவறில்லை. ஆனால் சாகாமையைப் பற்றி நீ கொண்டிருந்த கருத்தில்தான் தவறு இருக்கிறது. உனது சிந்தையை என்னில் நிலைப்படுத்திக் கொண்டால் உனக்கு மோட்சத்தை அருளி இருப்பேன். ஆனால், நீ இவ்வுலக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென்று விரும்பியதால், அதிலுள்ள கஷ்டத்தை நீ உணர வேண்டுமென்பதற்காகத்தான் நீ கேட்ட வரத்தை அளித்தேன். இனி உனக்கு உண்மையான சாகாவரம் என்கிற மோட்ச வாழ்வு அளிக்கிறேன்” என்றார்.
முனிவரும் மகிழ்ச்சியுடன் மோட்ச வாழ்வடைந்தார்.