ஒரு முறை சனி பகவான், தேவலோகத்தில் தேவேந்திரனுடன் இருந்தார்.
அப்போது தேவேந்திரன் சனி பகவானைப் பார்த்து, "உங்களால் பீடிக்கப்பட்டுத் துன்பம் அடையாதவர் எவரேனும் உண்டா?" என்று கேட்டான்.
அதற்கு சனி பகவான், "இதுவரை இல்லை. ஆனால், இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. ஒரே ஒருவரை மட்டும் இதுவரை நான் பீடிக்கவேயில்லை. ஆனால், இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது!" என்றபடி அவசரமாகப் புறப்பட்டார்.
"எங்கே செல்கிறீர்கள்?" என்று இந்திரன் கேட்டான்.
"சிவனைத் தரிசிக்க!" என்று கூறிச் சென்றார் சனி பகவான்.
கயிலாயம் சென்ற சனி பகவான் அங்கு சிவன் - பார்வதி தேவியை வணங்கி நின்றார்.
"சனியே! எம்மைக் காண வந்ததன் காரணம் என்ன?" என்று கேட்டார் சிவபெருமான்.
"இறைவனே, உங்கள் ஜாதகப்படி, இந்த விநாடி ஏழரைச் சனியின் காலம் தொடங்குகிறது. அதனால் தங்களைப் பீடிக்கவே வந்தேன்" என்றார் சனி பகவான்.
"எனக்குமா ஏழரைச் சனி? என்ன சனி... என்னுடனே விளையாடுகிறாயா? கிரகங்களின் சுழற்சியை நிர்ணயித்த என்னையே பீடிக்கப் போகிறாயா?" என்று கேட்டார்.
"ஆம் சுவாமி! தாங்கள் நிர்ணயித்த விதிகளின்படிதான் நான் தங்களிடம் வந்துள்ளேன். ஏழரை ஆண்டுகள் இல்லாவிட்டாலும், ஏழரை மாதங்கள் அல்லது ஏழரை நாட்களுக்காவது நான் தங்களைப் பீடித்து என் கடமையைச் செய்ய அனுமதி கொடுங்கள்" என்று கேட்டார் சனி பகவான்.
"ஏழரை நாட்கள் என்ன, ஏழரை நாழிகை கூட உன்னால் என்னைப் பீடிக்க முடியாது" என்று கூறிய சிவபெருமான், பார்வதி தேவி கழுத்தில் அணிந்திருந்த மாலையில் இருந்த ருத்ராட்சத்தில் போய் மறைந்து கொண்டார். ருத்ராட்சத்தில் உள்ள தெய்வீக சக்தியைத் தாண்டி வேறு எந்த சக்தியும் அதனுள்ளே நுழைய முடியாது. அதுவும் பார்வதி தேவியின் கழுத்தில் இருக்கும் ருத்ராட்சத்துக்குள் சனி பகவான் எப்படி நுழைய முடியும்?
ஆனால், சற்றும் அசராமல் சிவ நாமத்தை உச்சரித்தபடி அங்கேயே அமர்ந்து விட்டார் சனி பகவான். ஏழரை நாழிகை கடந்தது. சிவபெருமான் ருத்ராட்சத்திலிருந்து வெளியே வந்தார்.
சனி பகவானை நோக்கி, "பார்த்தாயா சனி... உன்னால் என்னை ஏழரை நாழிகை கூட நெருங்க முடியவில்லையே?" என்றார்.
"இல்லை பரமேசுவரா! நான் தங்களை ஏழரை நாழிகை நேரம் பீடித்திருந்தேன். அதனால்தான் உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நீங்களே, ஒரு ருத்ராட்சத்தில் மறைந்து, ஏழரை நாழிகை சிறைவாசம் ஏற்படுத்திக் கொண்டு அதை அனுபவித்தீர்கள்" என்றார்.
சனி பகவானின் விதியை நிர்ணயித்தவரும் கூட அந்த விதிக்குக் கட்டுப்பட வேண்டியது அவசியம்தான் என்பதை எடுத்துக் காட்டிய சனிபகவானை வாழ்த்தினார் சிவபெருமான்.
ஏழரை நாழிகை நேரம் தன் கழுத்தில் இருந்த ருத்ராட்சத்தில் தங்கி, தனக்கும் ருத்ராட்சத்துக்கும் சிவபெருமானின் அருள் கிடைக்கக் காரணமான சனி பகவானை அன்னை பார்வதி தேவியும் வாழ்த்தினாள்.