பக்தர் ஒருவரின் குடிசைக்கு வந்த திருடன் ஒருவன், பிரார்த்தனையிலிருந்த பக்தரை மிரட்டி, பணம் கேட்டான்.
பக்தர், பணமிருக்குமிடத்தைக் காட்டி எடுத்துக் கொள்ளச் சொன்னார்.
திருடனும் அவர் காட்டிய இடத்தில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
அவன் கதவருகே சென்ற போது, பக்தர், “எதை யார் கொடுத்தாலும் நன்றி சொல்ல வேண்டும். அதுதான் நமது பண்பாடு” என்றார்.
திருடனும் திரும்பி, “நன்றி” என்று சொன்னான். பின்னர் இருளில் சென்று மறைந்தான்.
வழியில் இருந்த காவலர்களிடம் மாட்டிக் கொண்டான். அவனை அவர்கள் விசாரித்த போது, அவன் ஒரு பக்தர் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டான்.
காவலர்கள் அந்தப் பக்தரை அழைத்து விசாரித்தனர்.
அந்த பக்தர், “என்னைப் பொறுத்த வரையில் இவன் திருடவில்லை. இவன் என்னிடம் வந்து, தனக்குப் பணக் கஷ்டம் இருப்பதாகச் சொன்னான். நான் தான் அவனுக்குப் பணம் கொடுத்தேன். பணம் பெற்றுக் கொண்ட இவன் என்னிடம் நன்றி கூட சொல்லி விட்டுத்தான் வந்தான்.” என்றார்.
காவலர்கள், அந்தத் திருடனை விட்டுவிட்டுச் சென்றனர்.
திருடன் திருந்தி அந்தப் பக்தரின் சீடனாக அவரின் பின்னால் சென்றான்.