அரசன் ஒருவன் வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குள் சென்றான். அங்கு வேடன் ஒருவனைச் சந்தித்தான்.
அந்த வேடன், “அரசே! வாழ்நாள் முழுவதும் என்னிடம் வறுமையே இருக்கிறது. எதையும் அனுபவிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைப்பதே இல்லை” என்று சொல்லி வருந்தினான்.
அரசனுக்கு அவனுடைய வறுமையைப் போக்கி வசதியுடன் அவன் வாழ வழி செய்ய வேண்டும் என்று விரும்பினான்.
அரசனுக்குச் சொந்தமான சந்தன மரங்கள் அடங்கிய காட்டை அவனுக்குப் பரிசாக அளித்தான். “இனி நீ மகிழ்ச்சியாக இருக்கலாம்” என்று சொல்லிவிட்டு நகருக்குள் திரும்பினான்.
ஆண்டுகள் சில சென்றன.
திடீரென்று அரசனுக்கு வேடனின் நினவு வந்தது.
ஒவ்வொரு சந்தன மரமும் நல்ல விலைக்குப் போகும் நிலையில் சந்தன மரக் காட்டையே பரிசாகப் பெற்ற வேடன் இப்போது மிகவும் வசதியடைந்து மகிழ்ச்சியுடன் இருப்பான் என்று எண்ணினான்.
அவனைப் போய்ச் சந்தித்து விட்டு வருவோம் என்று காட்டுக்குச் சென்றான்.
காட்டில் வேடனைச் சந்தித்த அரசன் அதிர்ச்சியடைந்தான். அவன் முன்பிருந்ததைக் காட்டிலும் ஏழ்மை நிலையிலிருப்பது போல் தோன்றியது.
“வேடனே நான் உனக்கு சந்தன மரக் காட்டையே பரிசாக அளித்திருந்தேனே, அதன் பிறகும் நீ ஏழ்மையிலிருக்கிறாயே...? சந்தன மரங்களை என்ன செய்தாய்? என்று விசாரித்தான்.
“அரசே! தாங்கள் எனக்குக் கொடுத்த சந்தன மரக் காட்டிலிருந்து மரங்களை வெட்டி விறகாக்கி விற்று வந்தேன். விறகாக விற்பதை விட கரியாக மாற்றி விற்றால் அதிகமான பணம் கிடைக்கும் என்று நினைத்தேன். அதனால், அந்தக் காட்டையே எரித்துக் கரியாக்கி விற்று வாழ்க்கையை நடத்தினேன். இப்போது காட்டில் ஒன்றுமில்லாததால் கஷ்டப்படுகிறேன்” என்றான் அவன்.
“எது கிடைத்தாலும், அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். வேடனைப் போன்ற மூடர்கள் எதையும் அனுபவிக்க முடியாது” என்று எண்ணியபடி திரும்பினான்.