மாமுனிவரான குரு என்பவர் நிலத்தில் உழுது பயிர் செய்து அதில் கிடைக்கும் பலனை அனைவருக்கும் பகிர்ந்தளித்துக் கொண்டிருந்தார்.
இவருடைய நற்செயலைப் பாராட்டிட விரும்பிய இந்திரன் அவர் முன் தோன்றினான்.
அவன் அவரிடம், “உங்களுக்கு என்ன வரம் வேண்டும்? என்னிடம் தயங்காமல் கேளுங்கள்!” என்றான்.
தனக்கென்று எதையும் பெற்றுக் கொள்ள விரும்பாத அவர், “இந்தப் பூமியில் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் இறப்புக்குப் பின் சொர்க்கம் செல்ல வேண்டும். அந்த வரத்தையே எனக்குக் கொடுங்கள்” என்று கேட்டார்.
இப்படி ஒரு வரம் கிடைத்தால் மனிதர்கள் யாருக்கும் நல்ல செயல்கள் செய்வதில் நாட்டமிருக்காது. ஆன்மிக வழிபாடு என்று எதுவுமில்லாமல் போய்விடும் என்று அஞ்சினான் இந்திரன்.
“அய்யா, நீங்கள் கேட்ட வரத்தினால் உலகிற்கு எந்த நன்மையும் கிடைக்காது. மாறாக, தீமைதான் விளையும்” என்று எடுத்துச் சொன்னான் இந்திரன்.
“வேறு ஏதாவது வரத்தைக் கேளுங்கள்” என்றான்.
ஆனால் அவரோ, “மனிதர்கள் சொர்க்கம் செல்லும் வரம் தவிர்த்து, தனக்கு வேறு ஏதும் வேண்டாம்” என்றார்.
இந்திரன் வேறு வழியில்லாமல் அவர் கேட்ட வரத்தை அளிப்பதென்றும் அதில் ஏதாவது கட்டுப்பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தான்.
அவனுக்குள் ஒரு யோசனை தோன்றியது. “அய்யா, நீங்கள் கேட்ட வரத்தை அளித்தேன். ஆனால், போர்க்களத்தில் இறக்கும் மனிதர்கள் மட்டுமே சொர்க்கம் செல்வார்கள். மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பைக் கேட்டு வற்புறுத்த வேண்டாம்” என்றான்.
குரு அதை ஒப்புக் கொண்டார்.
போர்க்களத்தில் இறப்பவர்கள் சொர்க்கம் செல்கிறார்கள் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது.