வாழ்நாள் முழுவதும் துன்பத்தைக் கொடு!
பாண்டவர்களின் தாயான குந்தி தேவி கண்ணனிடம் அதிகமான பக்தி கொண்டிருந்தாள்.
குந்திதேவியின் பக்திக்குப் பரிசாக அவள் கேட்கும் வரத்தைக் கொடுக்கலாம் என்று கண்னன் நினைத்தார்.
ஒருநாள் கண்ணன் குந்திதேவியிடம், “நீ விரும்பும் ஒரு வரம் கேள்! அதை நான் உனக்குத் தருகிறேன்” என்றார்.
அவள் கண்ணனிடம் என்ன வரம் கேட்கலாம்? என்கிற சிந்தனையில் ஆழ்ந்தாள்.
பின்னர், “கண்ணா! என் வாழ்நாளில் நாள்தோறும் எனக்கு ஏதேனும் துன்பத்தைக் கொடு! இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம்!” என்றாள்.
இதைக் கேட்டு வியப்படைந்த கண்ணன், “நீண்ட வாழ்க்கை, நிறைந்த செல்வம், அனைவரையும் அடக்கி ஆளக் கூடிய வல்லமை போன்ற வரங்களைத்தான் என்னிடம் பலரும் கேட்டிருக்கிறார்கள். ஆனால், நீ நாள்தோறும் துன்பத்தைக் கொடு என்று ஒரு வரத்தைக் கேட்கிறாய். இப்படி என்னிடம் யாரும் வரம் கேட்டதில்லை. நீ எதற்காக இப்படி ஒரு வரம் கேட்டாய்?” என்றார்.
உடனே குந்தி தேவி, “கண்ணா! நான் தினமும் உன்னை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு துன்பம் வந்தால் மட்டுமே உன்னைப் பற்றிய நினைவு வருகிறது. எனவே நான் இந்த வரத்தைக் கேட்டேன்” என்றாள்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.