ஒரு ஊரில் பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். அவன் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் சென்று பிச்சை கேட்கும் பொழுது, "அம்மா பார்வதி பிச்சை போடு" என்று கேட்பது அவன் வழக்கம்.
இவன் குரல் ஒரு முறை கைலாயத்தில் இருந்த பார்வதி தேவி காதுகளில் சென்றடைந்தது. அவளும் அவனிடம் இரக்கமுற்றாள்.
பார்வதிதேவி சிவபெருமானிடம் அந்தப் பிச்சைக்காரனுக்கு இரக்கம் காட்டும்படி வேண்டினாள்.
சிவபெருமான் இப்பிறவியில் பிச்சையெடுப்பது அவன் தலைவிதி என்றும், அவன் தலைவிதியைத் தம்மால் மாற்ற முடியாது என்று சொன்னார்.
அவன் மேல் கருணை கொண்ட பார்வதி தன்னை மாற்றிகொள்ளவில்லை.
"முடிந்தால் அவன் விதியை மாற்றி கொள்" என்றார் சிவபெருமான்.
"நான் அவனை மிகப் பெரிய கோடீஸ்வரனாக மாற்றி, அவன் விதியை நான் மாற்றி காட்டுகிறேன்" என்று சிவபெருமானிடம் சவால் விட்டாள் பார்வதி தேவி.
சிவபெருமான் சிரித்துக் கொண்டார்.
ஒரு வீடு முடிந்து, அடுத்த வீட்டுக்கு வரும் வழியில் மூன்று மூடைகளில் தங்க கட்டிகளை அவன் வரும் வழியில் போட்டாள் பார்வதி.
அந்த நேரம் பார்த்து பிச்சைக்காரனுக்கு திடீரென "ஒரு வேளை தான் குருடாகி விட்டால் என்ன செய்வது?" என்ற எண்ணம் ஏற்பட்டது.
கையில் கிடைத்த ஒரு கம்பை எடுத்து கொண்டு, இரு கண்களையும் மூடிக்கொண்டே பக்கத்து வீட்டிற்கு சென்றான் அந்தப் பிச்சைக்காரன்.
வழியில் பார்வதி தேவி போட்டிருந்த பொற்காசு மூட்டைகள் காலில் இடறியது.
பிச்சைக்காரனோ, கண்களை மூடிகொண்டு இருப்பதால் அந்தப் பொற்காசு மூட்டைகளைக் கல் என்று நினைத்துத் தன் கால்களால் அதை உதைத்து விட்டு, அடுத்த வீட்டிற்குச் சென்றான்.
அடுத்த வீட்டிற்குச் சென்ற பின் கையில் வைத்திருந்த கம்பைத் தூக்கி எறிந்து விட்டு, மூடிய கண்களைத் திறந்து கொண்டு, குருடாகி விட்டாலும் கூட தன்னால் தொடர்ந்து பிச்சை எடுக்க முடியும் என்று தனக்குள் திருப்தியடைந்து கொண்டு, அடுத்த வீட்டு வாசலில் நின்று கொண்டு வழக்கம் போல, "அம்மா பார்வதி பிச்சை போடு" என்று வழக்கம்போல் கேட்டான்.
விதி வலியது. அதை யாரும் வெல்லமுடியாது...! என்றபடி பார்வதி தேவி கைலாயம் திரும்பினார்.