ஒரு வீட்டில் நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க்குட்டி காகம் ஒன்று நட்பாக இருந்தது.
ஒரு நாள் அந்தக் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது.
இதைக் கண்ட நாய்க்குட்டி காகத்திடம் சென்று, “காகமே, இன்று எதுவும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்களே... ஏன்?” என்று கேட்டது.
அதற்குக் காகம், “இந்த மனிதர்கள் மற்ற பறவைகளை அன்புடன் வளர்க்கின்றார்கள். அவைகளின் செயல்களைப் பாராட்டுகின்றார்கள். ஆனால் எங்களை மட்டும் வெறுத்துக் கல்லால் எறிந்து துரத்துகிறார்களே ஏன்? என்று கேட்டது.
“இதற்குக் காரணம் உங்கள் தீய குணங்கள்தான். இதை நீங்கள் இல்லாது செய்தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள்” என்றது நாய்க்குட்டி.
“எங்களிடம் அப்படியென்ன தீய குணங்கள் இருக்கின்றன? கடமை, சுத்தம் என்று எங்களிடமும் பல நல்ல குணங்கள் இருக்கின்றனவே, எனவே நாங்கள்தான் சிறந்தவர்கள்” என்றது காகம்.
“உண்மைதான்!” என்றது நாய்க்குட்டி.
“இந்த மனிதர்களுக்குப் பகிர்ந்துண்ணும் பண்பைக் கற்றுத் தந்தவர்களே நாங்கள்தான்!” என்று பெருமையுடன் சொன்னது காகம்.
“ஆமாம். அதுவும் உண்மைதான்!” என்று மறுபடியும் சொன்னது நாய்க்குட்டி.
“இப்படி நல்ல குணங்கள் எங்களிடம் இருந்தாலும், மனிதர்கள் மற்றப் பறவைகளுக்குத் தரும் மதிப்பை எங்களுக்குத் தருவதாக இல்லை...!” என்றபடி, “குயில் கூவும் போது அதன் இனிமையை இரசிக்கிறார்கள். மயில் ஆடும் போது அதை இரசித்துப் பாராட்டுகிறார்கள். கிளியை வீட்டில் வளர்த்து பேசக் கற்றுக் கொடுக்கிறார்கள்.அனால் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தும் எங்களைக் கண்டாலே துரத்துகிறார்கள். இது ஏன் என்றுதான் புரியவில்லை...” என்று சொல்லி மீண்டும் காகம் வருத்தப்பட்டது.
“உங்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும், உங்களிடம் இருக்கும் சில தீய குணங்களால் தான் மனிதர்கள் உங்களை வெறுக்கிறார்கள்” என்று கூறியது நாய்க்குட்டி.
“அப்படி எங்களிடம் என்ன தீய குணங்கள் இருக்கின்றன?” என்று கேட்டது காகம்.
“திருடுதல், ஏமாற்றுதல் என்பது போன்ற தங்களின் தீய குணங்கள்தான்... உங்களை மனிதர்களுக்குப் பிடிக்காமல் செய்துவிட்டது” என்றது நாய்க்குட்டி.
காகம் தலை குனிந்தது.
உண்மைதானே...! எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும், தீய குணங்களும் சேர்ந்து இருந்து விட்டால் அவர்களுக்கு மதிப்பு கிடைப்பதில்லை.