துறவி ஒருவர் ஊர் ஊராகச் சென்று நீதிக்கதைகள் சொல்லியும், போதனைகள் செய்தும் இறை பணியாற்றி வந்தார்.
அவர் ஒரு ஊரில் ஒரு மாதம் வரை தங்கி இறைப் பணியாற்றி விட்டு வேறு ஊருக்கு செல்ல தனது மாட்டு வண்டியைத் தயார் செய்து கொண்டு இருந்தார்.
அப்போது அவர் அருகில் ஒருவன் வந்து, அவரின் இறைப் பணியில் மிகுந்த ஈடுபாடாகி விட்டதாகவும், தானும் அவருடன் சேர்ந்து கொள்வதாகவும் தெரிவித்தான்.
அவன் ஒரு அனாதை என்பதால் அவன் மேல் இரக்கம் கொண்ட அவர் அவனைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டார். அவர்கள் பொருட்கள் அனைத்தையும் மாட்டு வண்டியில் கட்டிக் கொண்டு அடுத்த ஊருக்குப் பயணமானார்.
துறவி வண்டியில் முன்னால் அமர்ந்திருந்தார். அவன் வண்டிக்கு பின்னால் அமர்ந்திருந்தான்.
துறவி அவனிடம், “வண்டியின் பின்பகுதியிலிருந்து பொருட்கள் விழுகிறதா என்று பார்த்துக் கொண்டு வா” என்று சொன்னார்.
சிறிது தூரம் பயணம் செய்த அவர்கள் ஓரிடத்தில இளைப்பாற வண்டியை நிறுத்தினார்கள்.
அப்போது வண்டியின் பின் பக்கம் வந்த துறவி சில பொருட்களைக் காணாமல் போனது அறிந்தார். எனவே, அவனிடம் “இங்கிருந்த பொருட்கள் எங்கே?” என்று கேட்டார்.
அவன் சில பொருட்கள் கீழே விழுந்து விட்டன என்று பதில் சொன்னான்.
உடனே துறவி, “கீழே விழுந்தால் எடுத்து வைத்திருக்க வேண்டியது தானே?” என்று கேட்டார்.
அதற்கு அவன், “நீங்கள்தானே பொருட்கள் விழுகின்றதா... என்று பாக்கத்தானே சொன்னீர்கள்” என்றான்.
அவன் அவர் சொன்னதை அப்படியே செய்ததாகச் சொன்னான்.
துறவி அவனுடைய அறியாமையை எண்ணி வருந்தினார்.
அடுத்து அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
துறவி அவனிடம், “இனி எது கீழே விழுந்தாலும் பிடித்து எடுத்து வை” என்று சொல்லி அவனை வண்டியில் ஏற்றினார்.
சிறிது தூரம் சென்ற பின் ஒரு இடத்தில் இளைப்பாற மறுபடியும் நிறுத்தினார்.
இறங்கி வண்டிக்குப் பின்னால் வந்து பார்த்தார்.
வண்டி பின்பக்கம் முழுதும் மாட்டுச் சாணமாக இருந்தது. அவன் கையிலும் சாணம் இருந்தது.
துறவி, “என்ன வண்டியில இவ்வளவு சானம் இருக்கிறது” என்று கேட்டார்.
அதற்கு அவன், “சுவாமி, நீங்கள்தானே, எது கீழே விழுந்தாலும் எடுத்து வை என்று சொன்னீர்கள். சானம் கீழே விழுந்து கொண்டிருந்தது. நான் அதை வண்டியில் பத்திரமாக எடுத்து வைத்தேன்” என்று பதில் சொன்னான்.
அவன் பதில் கேட்டு துறவி அவன் அறியாமையை நினைத்து கவலைப்பட்டார்.
அவனுடைய அறியாமையை முதலில் மாற்றி அவனைச் சிறந்தவனாக மாற்ற வேண்டுமென்று நினைத்துக் கொண்டு அடுத்த ஊருக்குப் பயணத்தைத் தொடர்ந்தார்.