காட்டில் ஒரு ஓநாய் வசித்து வந்தது. அது கெட்ட குணம் கொண்டதாக இருந்தது.
பலம் குறைந்த ஏதேனும் விலங்குகளையோ... பறவைகளையோ கொன்று தின்று தன் பசியைப் போக்கிக் கொள்ளும்.
ஒரு நாள் அது இறந்த ஒரு மிருகத்தின் உடலைத் தின்றபோது, அதையுமறியாமல் ஒரு எலும்புத் துண்டு அதனுடைய தொண்டையில் போய்ச் சிக்கிக் கொண்டது.
அதனால் அவதிப்பட்ட ஓநாய் வேறு எந்த உணவையும் சாப்பிட முடியாமல் தவித்தது.
தன்னுடைய தொண்டையில் சிக்கியிருக்கும் எலும்பை அகற்றுவது பற்றி யோசித்தது. அதற்கு நாரையின் ஞாபகம் வந்தது. நாரை நினைத்தால், அதனுடைய அலகைக் கொண்டு தன்னுடைய தொண்டையிலிருக்கும் எலும்புத் துண்டை எடுத்து விடும் என்று நம்பியது.
ஒரு நாரையை அணுகி, தன்னுடைய தொண்டையிலிருக்கும் எலும்புத்துண்டை அகற்றித் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டியது. அதற்காக நாரைக்குத் தகுந்த பரிசு தருவதாகவும் கூறியது.
ஓநாயின் பேச்சை நம்பிய நாரையும், தன் நீளமான அலகைக் கொண்டு, ஓநாயின் தொண்டைக்குள் விட்டு அங்கே சிக்கிக் கொண்டிருந்த எலும்பை வெளியே எடுத்துப் போட்டது.
அந்த நாரை, ஓநாயிடம் பரிசு கொடுக்குமாறு கேட்டது.
உடன் ஓநாய், “உனக்குத்தான் ஏற்கனவே வெகுமதி கொடுத்து விட்டேனே,என்னைப்போன்ற ஓநாயின் வாயில் உன் தலையை விட்டுவிட்டு, அதைப் பத்திரமாக வெளியே எடுக்க அனுமதித்தேனே... அதுவே உனக்குச் சிறந்த பரிசு தான். இங்கிருந்து உடனடியாக ஓடிவிடு. இல்லையேல், உன் உயிரை இழக்க வேண்டியிருக்கும்” என்று எச்சரிக்கவும் செய்தது.
நாரையும், “கொடியவர்களுக்கு உதவி செய்வது, தன்னுடைய உயிருக்கே ஆபத்தாக அமையும்” என்று நினைத்தபடி அங்கிருந்து அகன்றது.