அரசன் ஒருவனுக்குத் தான் இந்த உலகின் மிகப்பெரிய சக்கரவர்த்தியாக ஆகிவிட வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது.
இதனால் அவனிடம்,நாட்டிலிருக்கும் அனைத்தையும் அடக்கியாள வேண்டுமென்கிற எண்ணமும் சேர்ந்து கொண்டது.
இந்நிலையில், அவன் அந்நாட்டில் பிரபலமாகியிருந்த ஞானி ஒருவரைச் சந்தித்து, தன்னுடைய ஆளுமையை அதிகரித்துக் கொள்வதற்காக ஆசி பெறச் சென்றான்.
அரசன் சென்ற நேரத்தில், ஞானி தியானத்தில் இருந்தார்.
அரசனும் அங்கு சிறிது நேரம் காத்துக் கொண்டிருந்தான். ஞானி, தன் தியானத்தை முடிக்காமல் இருந்தார்.
அரசன் மேலும் சிறிது நேரம் காத்துக் கொண்டிருந்தான். இருப்பினும், ஞானியின் தியானம் முடியாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.
“ஏய் முனிவரே! நான் இந்த உலகத்தையே ஆள வேண்டுமென்ற வேட்கையில், உன்னிடம் ஆசி பெறலாமென்று வந்திருக்கிறேன். நீ என்னைக் கண்டு கொள்ளாமல் கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்திருக்கிறாயே...?” என்று ஆவேசத்துடனும் கோபத்துடனும் ஞானியை நோக்கிக் கத்தினான். பின்னர் அங்கிருந்து வெளியேற முயன்றான்.
அவனுடைய சத்தத்தில் எழுந்த ஞானி, “அரசே, இந்த உலகத்தையே ஆள வேண்டுமென்று நினைக்கிறீர்கள். உங்களால் உங்களின் கோபத்தைக் கூட அடக்க முடியாமல் இருக்கும் போது, எப்படி பிறரை அடக்கி ஆளப் போகிறீர்கள்?” என்று அமைதியாகச் சொன்னார்.
அரசனுக்கு ஞானியின் பேச்சிலிருந்து ஞானம் பிறந்தது. அங்கிருந்து புதிய நம்பிக்கையுடன் திரும்பினான்.