உயிரைக் காப்பாற்றிய அவலட்சணம்
ஒரு காட்டில் நிறைய மரங்கள் இருந்தன. அதில் ஒரு மரத்தைத் தவிர மற்ற மரங்கள் அனைத்தும் நேராகவும் உயரமாகவும் வளர்ந்து இருந்தன.
அந்த மரம் மட்டும் வளைந்து நெளிந்து குட்டையாகக் காட்சி அளித்தது.
மற்ற மரங்களைப் பார்த்துப் பொறாமைப் பட்டது.
மற்ற மரங்கள் எல்லாம் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக தடிமனாகவும், நேராகவும், உயரமாகவும் வளர்ந்து அழகாக இருக்க, தான் மட்டும் இப்படி அவலட்சணமாக இருக்கிறோமே என்று வருத்தப் பட்டது.
ஒரு நாள் அந்தக் காட்டிற்குள் மரம் வெட்டிச் செல்ல வந்த பலர் அங்கிருந்த மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்தனர். உயரமாகவும், தடிமனாகவும் வளர்ந்திருந்த அனைத்து மரங்களும் வெட்டப்பட்டது.
வளைந்து நெளிந்திருந்த அந்த மரத்தின் அருகே வந்த சிலர் இந்த மரம் வளைந்து நெளிந்திருப்பதால் நமக்குப் பயன்படாது. இதை வெட்டினால் நமக்கு நேரான பலகை எதுவும் கிடைக்காது. இதை வெட்ட வேண்டாம் என்றனர்.
அதன் பின்பு வெட்டப்பட்ட மரங்களை அவர்கள் கொண்டு வந்த வ்ண்டியில் ஏற்றிச் சென்றார்கள்.
அதுவரை தன் உருவத்தை நினைத்து வேதனைப்பட்டு வந்த அந்த மரம் தன் அவலட்சணமே தன்னைக் காப்பாற்றி விட்டது என்று மகிழ்ந்தது.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.