குரு ஒருவர் மந்திரத்தைச் சொல்லி பாம்பு கடிக்கு விசத்தை இறக்கி வந்தார். இதனால், பாம்பு கடிக்கு விசம் இறக்குவதில் அவருக்கென்று தனி மதிப்பு இருந்தது.
அவரின் சீடன் ஒருவன் அவரிடம் அந்த மந்திரத்தை சொல்லித் தருமாறு பல காலமாக கேட்டு வந்தான்.
அவரும் அவனுக்கு அதைச் சொல்லிக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.
அவனும் விடுவதாக இல்லை. தொடர்ந்து அந்த மந்திரத்தைச் சொல்லிக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டே இருந்தான்.
ஒரு நாள் அவனுடையதொந்தரவு பொறுக்க முடியாமல் கோபத்தில், ''என்னைத் தொந்தரவு செய்யாதே... விலகிப் போ” என்று அவரது தாய்மொழியான கன்னட மொழியில் கத்தினார்.
கன்னட மொழி தெரியாத அந்த இளைஞனுக்கு அதன் பொருள் தெரியவில்லை.
தன்னுடைய குரு தனக்குப் பாம்பு கடி விசம் இறங்குவதற்கான மந்திரத்தைச் சொல்லி விட்டாரோ என்று மகிழ்ச்சியுடன், “இதுதான் பாம்பு கடிக்கான மந்திரமா?” என கேட்டான்.
அவனிடமிருந்து தப்பித்தால் போதுமென்று நினைத்த அவர், “ஆமாம்... இதுதான் பாம்பு கடிக்கான மந்திரம்” என்றார்.
அவனுக்குப் பாம்பு கடிக்கான மந்திரமென கன்னட மொழி வாக்கியமான, ''என்னைத் தொந்தரவு செய்யாதே... விலகிப் போ” என்பதைச் சொல்லிப் பழகிக் கொண்டான்.
தன்னுடைய குரு சொல்லிக் கொடுத்தாக கன்னட மொழி வாக்கியத்தைச் சொல்லியே பாம்பு கடிக்கான விசத்தை இறக்கி விடத் தொடங்கினான்.
அவன் அந்த வாக்கியத்தின் மேல் நம்பிக்கை கொண்டு செயல்பட அது அவனுக்குப் பலிக்க ஆரம்பித்து விட்டது.
அவனும் பாம்புகடி விசம் இறக்குவதில் பெயர் பெற்று விட்டான்.
ஒரு நாள் அந்த நாட்டின் இளவரசிக்குப் பாம்பு கடித்து விட்டது.
குருவைக் கூப்பிட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரும் எத்தனையோ மந்திரங்களைச் சொல்லியும் விசம் இறங்குவதாக இல்லை. அரச குமாரியின் நிலைமை மிகவும் மோசமானது.
அரசவையிலிருந்த ஒருவர் புதிதாக இளைஞன் ஒருவன் பாம்பு கடிக்குச் சிகிச்சை அளிக்கிறான் என்று சொல்ல அவனைக் கூப்பிட்டு அனுப்பினார்கள்.
அந்த இளைஞனும் வந்து தனது மந்திரந்தை ஒரே ஒரு முறை சொல்ல இளவரசியின் விசம் உடனே இறங்கிவிட்டது.
குருவுக்கு மிகவும் ஆச்சரியமாகிப் போய்விட்டது.
தான் மந்திரம் கற்றுதராவிட்டாலும் வேறு எவரிடமோ மந்திரம் கற்றுக் கொண்டு வந்து விட்டானே என நினைத்த அவர் அவனிடம், “நீ
யாரிடம் மந்திரம் கற்றாய்?” என்று கேட்டார்.
“சுவாமி, நான் உங்களிடம் தானே கற்றேன்'' என்றான்.
அவர் நாம் அவனுக்கு மந்திரம் எதுவும் சொல்லிக் கொடுக்கவில்லையே எப்படி இது சாத்தியம்? என்று நினைத்தபடி மந்திரத்தைச் சொல்லும்படி கேட்டார்.
அவன் மந்திரமாக கன்னட மொழி வாக்கியமான, ''என்னைத் தொந்தரவு செய்யாதே... விலகிப் போ” என்றான்.
அவனுடைய நம்பிக்கை குருவுக்குப் புரிந்தது.